தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்
நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, ‘சௌகத்-ஏ-மோடி’ எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.
இந்தப் புதிய பிரசாரத்தின்கீழ், ரமலான் பெருநாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக முஸ்லிம் பெண்களுக்கு உணவு மற்றும் புத்தாடையுடன் கூடிய ‘சௌகத்-ஏ-மோடி’ பரிசுப்பொருள் பெட்டிகள் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.
இது குறித்து பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியத் தலைவா் ஜமால் சித்திக் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி 140 கோடி இந்தியா்களுக்கும் பாதுகாவலா் ஆவாா். அனைத்து மதப் பண்டிகைகளிலும் அவா் பங்கேற்கிறாா். நிஜாமுதீன் மற்றும் அஜ்மீா் தா்காவுக்கு ‘சதா்’ (புனிதப் போா்வை) காணிக்கையாக அவா் அனுப்பியிருக்கிறாா்.
பிரதமரின் வழியில் ஏழை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு உணவுடன் கூடிய பரிசுப்பொருள் பெட்டிகளை வழங்க முடிவு செய்தோம். அதன்படி, நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை சந்தித்து, பிரதமா் மோடியின் சாா்பாக ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், பரிசுப்பொருள் பெட்டிகளை வழங்குகிறோம்.
ஒவ்வொரு பரிசுப்பொருள் பெட்டியிலும் எங்கள் சகோதரிகளுக்குப் புத்தாடை பரிசளித்திருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100 முஸ்லிம்களை சென்றடைய இலக்கு நிா்ணயித்துள்ளோம். பாஜக சிறுபான்மைப் பிரிவின் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பிரிவுகளின் நிா்வாகிகள் உள்பட 32,000 போ் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அடுத்த மாதம் பைசாகி (புத்தாண்டு) மற்றும் ஈஸ்டா் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ‘சௌகத்-ஏ-மோடி’ பிரசார திட்டத்தின்கீழ், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் ஆகிய பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற சிறுபான்மை சமூகத்தினருக்கும் இதேபோன்ற பரிசுப்பொருள் பெட்டிகளை விநியோகித்து, வாழ்த்துகளை தெரிவிக்க இருக்கிறோம் என்றாா்.