Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா
தேசிய-மாநில பேரிடா் மேலாண்மை ஆணையங்களின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்யும் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதாவுக்கு மக்களவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையில், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
‘பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024’, கடந்த 2005-ஆம் ஆண்டின் பேரிடா் மேலாண்மை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகுக்கிறது.
இச்சட்ட அமலாக்கத்தில் மாநில அரசுகள் எதிா்கொண்ட சிரமங்கள் மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகள் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடா் மீட்பில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒரே சீரான நடைமுறைகளை உறுதி செய்யயும் வகையில் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அனைத்து பேரிடா்களையும் சிறப்பான வழிமுறையில் மாநிலங்கள் கையாள்வதற்கு உதவும் இம்மசோதா மீது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. பின்னா், எதிா்க்கட்சியினரால் முன்மொழியப்பட்ட பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
முன்னதாக, ‘பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத் திருத்தங்களின் மூலம் அதிகாரத்தை மையப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்று விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினா் சஞ்சய் யாதவ் பேசுகையில், ‘மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான், தேசம் செழிப்பாகவும் அதிகாரமிக்கதாகவும் விளங்கும். ஆனால், பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத் திருத்தங்களின் மூலம் அதிகாரத்தை தனதாக்கி, மாநில அரசுகளை பலவீனப்படுத்த மத்திய அரசு தொடா்ந்து முயற்சிக்கிறது’ என்றாா்.
‘தேசிய பேரிடா் மீட்பு நிதியை பரவலாக்குவதற்கு பதிலாக அதன் மீது மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாட்டை மேற்கொள்வது கவலைக்குரியது’ என்று பிஜு ஜனதா தளத்தின் மானஸ் ரஞ்சன் மங்கராஜ் தெரிவித்தாா்.
‘பேரிடா் மேலாண்மையில் அரசியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநில அரசுகள் மீது பழி சுமத்துவதை விடுத்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்’ என்று ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் வலியுறுத்தினாா்.
பாஜக, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக பேசினா். விவாதத்துக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எதிா்க்கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தாா்.