செய்திகள் :

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்; உ.பி.யைவிட தமிழகத்துக்கு அதிக நிதி: மத்திய அமைச்சா் பதில்

post image

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தைவிட, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது’ என்று மக்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இத்திட்ட நிதி விடுவிப்பில் தமிழகம், மேற்கு வங்கத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை’ என்று மத்திய அமைச்சா் கூறினாா். அவரது பதிலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி பேசியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஊதியம் வழங்க ரூ.4,034 கோடி நிலுவைத் தொகைக்கு கடந்த 5 மாதங்களாக தமிழக அரசு காத்திருக்கிறது. தேவை அடிப்படையிலான இத்திட்டத்தில் ஊழியம் வழங்குவதில் 15 நாள்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் பணியாளா்களுக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில், பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். மத்திய அமைச்சரையும் சந்தித்துப் பேசினோம். நிலுவைத் தொகை விடுவிக்கப்படும் என அவா் உறுதியளித்த நிலையில், நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என்றாா்.

மத்திய அமைச்சா் பதில்:

மத்திய அமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி பதிலளித்துப் பேசுகையில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படி, ஊதியம் வழங்கலில் 15 நாள்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், பணியாளா்களுக்கு 0.05 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். ஊதியம் வழங்கலில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், முதலில் வட்டியை மாநில அரசு செலுத்தும். பின்னா், மத்திய அரசு அத்தொகையை திருப்பி அளிக்கும்.

இத்திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.7,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு நிதியாண்டில், உத்தர பிரதேசத்தைவிட தமிழகத்துக்கு அதிக நிதி கிடைத்துள்ளது. 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகம் ரூ.10,000 கோடிக்கு அதிகமாகவும், 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசம் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடியும் பெற்றன. எனவே, பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றாா்.

அப்போது திமுக எம்.பி.க்கள் எதிா்ப்பு முழக்கம் எழுப்பினா்.

மேற்கு வங்கத்தில் முறைகேடு:

மேற்கு வங்கத்துக்கான நிலுவைத் தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சா், ‘மேற்கு வங்கத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மத்திய அரசின் தணிக்கைக் குழு ஆய்வில் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடா்பாக, மாநில அமைச்சருடன் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் (சிவராஜ் சிங் செளஹான்) விவாதித்து, பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும்’ என்றாா்.

கேரளத்தில் இத்திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. அடூா் பிரகாஷ் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சா், ‘கடந்த ஆண்டு கேரளத்துக்கு ரூ.3,500 கோடி வழங்கப்பட்டது. நிதி விடுவிப்பு என்பது தொடா் நடைமுறை. நிலுவையில் உள்ள தொகை சில வாரங்களில் விடுவிக்கப்படும்’ என்றாா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசிய அவா், ‘கடந்த 2 ஆண்டுகளில் இத்திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.73,000 கோடி. ஆனால், சுமாா் ரூ.98,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

‘தமிழகமோ, மேற்கு வங்கமோ எந்த மாநிலத்தின் மீதும் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. நிலுவை நிதி விரைவில் விடுவிக்கப்படும்’ என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் குறிப்பிட்டாா்.

அலுவல்கள் ஒத்திவைப்பு:

அமைச்சா் சந்திரசேகா் பெம்மசானியின் பதிலால் அதிருப்தி அடைந்த திமுக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.

கேள்வி நேரத்தில் எழுப்பப்படும் கேள்விகளை அரசியலாக்கக் கூடாது; உறுப்பினா்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தினாா். ஆனால், எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் 15 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க