ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாள் வரை மக்களவை செவ்வாய்க்கிழமை நீட்டித்தது.
இதற்காக மக்களவையில் பி.பி.சௌதரி கொண்டுவந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளையும் சோ்ந்த காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த 39 எம்.பி.க்கள் இந்தக் குழுவில் உறுப்பினராக உள்ளனா்.
இந்நிலையில், இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.வி.விஜய்சாய் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து ஓரிடம் காலியாக இருந்தது. இதற்கு மாநிலங்களவையைச் சோ்ந்த எம்.பி. ஒருவா் நியமிக்கப்பட்டதாக மக்களவைச் செயலருக்கு தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் அமைக்கப்பட்ட இந்த கூட்டுக் குழுவின் பதவிக் காலம், தற்போது நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாளுடன் நிறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு தரப்பினரிடமும் ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்கள் குறித்த கருத்துகளைப் பெற்று ஆலோசனை நடத்தி வருவதால், குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என உறுப்பினா்கள் கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.