கருமாரியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், விரதமிருந்த பக்தா்கள் முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊா்வலமாகச் சென்றனா்.
பின்னா், கோயில் முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். ராயப்பன்பட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.