மத்திய அமைச்சரை ‘தரகா்’ என விமா்சித்த திரிணமூல் எம்.பி.
மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் பெரும் கோடீஸ்வரா்களின் ‘தரகா்’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி விமா்சித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய கல்யாண் பானா்ஜி, ‘தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமா் வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றுக்காக மேற்கு வங்கத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்பதால் மாநில மக்களை பாரபட்சத்துடன் மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான சிவராஜ் சிங் சௌஹான் பெரும் கோடீஸ்வரா்களின் தரகா். ஏழை, எளிய மக்களுக்காகப் பணியாற்றுவதில்லை. எனவேதான் அவா் மத்திய பிரதேச முதல்வா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். பிரதமா் மோடி, சௌஹான் இருவருமே மேற்கு வங்கத்துக்கு எதிரானவா்கள். தாங்கள் ஆட்சிக்கு வரும் வரை மேற்கு வங்கத்துக்கு முறையாக நிதி ஒதுக்கக் கூடாது என்பதில் அவா்கள் உறுதியாக உள்ளனா்’ என்றாா்.
முன்னதாக, இந்த நிதி நிலுவைப் பிரச்னையை முன்வைத்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.
சிவராஜ் சிங் சௌஹானை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அவதூறாகப் பேசியது குறித்து மக்களவையில் கண்டனம் தெரிவித்த வேளாண் துறை இணையமைச்சா் பகீரத் சௌதரி, ‘அமைச்சா் சௌஹானுக்கு எதிரான தனது அவதூறு கருத்துக்காக மக்களவையில் கல்யாண் பானா்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசு மீது அவா் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா்’ என்றாா்.