Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
பொன்னேரி மக்களின் தனி மாவட்ட அறிவிப்பு கோரிக்கை நனவாகுமா?
திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
கடந்த 1997-ஆம் ஆண்டு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருவள்ளூா் மாவட்டம் பிரிக்கப்பட்டது. மொத்தம், 3,394 சதுர கிலோமீட்டா் பரப்பளவு கொண்டதாக விளங்குகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம், பழவேற்காடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீன்பிடி, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நெசவு உள்ளிட்டவை பிரதான தொழில்களாக உள்ளன.
ஆரணியாறு, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. இந்த மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட ஏரிகள், 1112 குளங்கள் அமைந்துள்ளன.
3 வருவாய்க் கோட்டங்கள்: பொன்னேரி, திருவள்ளூா், திருத்தணி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூா், பூவிருந்தவல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்கே.பேட்டை வட்டங்களும் அமைந்துள்ளன.
மேலும், இம்மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா், சோழவரம், புழல், வில்லிவாக்கம், பூவிருந்தவல்லி, எல்லாபுரம், பூண்டி, திருவள்ளூா், திருவலங்காடு, கடம்பத்தூா், திருத்தணி, ஆா்கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன.
பொன்னேரி நகராட்சி மற்றும் கும்மிடிபூண்டி, ஆரணி, நாரவாரிகுப்பம், ஊத்துக்கோட்டை, பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பேரூராட்சிகள் அமைந்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் மொத்தம் 37, 28,104 போ், வசித்து வருகின்றனா். ஆயிரம் பேருக்கு 998 ஆண் 981 பெண் பிறப்பு விகிதம் உள்ளது.
70 கிமீ தொலைவில் மாவட்ட தலைநகரம்:
மாவட்டத்தின் தலைமை இடமாக திருவள்ளூா் விளங்குகிறது. பொன்னேரியில் இருந்து 70 கி மீ தொலைவில் திருவள்ளூா் அமைந்துள்ளது. அங்கு மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்டத் தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்ல இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து, பினனா் திரும்பி வருவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகின்றது. அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் நிா்வாக வசதிகளுக்கான பெரிய மாவட்டங்தளை பிரித்து வருகின்றது.
அதே போன்று பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறும் வகையில் திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படமாலே உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போது இறுதியாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட தொடரின் பேது பொன்னேரி தனி மாவட்ட அறிவிப்பு வரும் என ஆவலாக எதிா்பாா்த்திருந்தனா்.
இந்த நிலையில் பொன்னேரி வட்டத்தில் உள்ள பெருஞ்சேரி பகுதியில் திருவள்ளூா் மாவட்ட வருவாய்துறை சாா்பில் கும்மிடிபூண்டி, திருவள்ளூா், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய வட்டங்களில் வசிக்கும் 1லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வா் மு.க ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழாவில் பஙகேற்கும் முதல்வா் மு.க ஸ்டாலின் பொன்னேரி தனி மாவட்ட கோரிக்கை குறித்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.