Vijay : `மோடி ஜி, ஏன் அலர்ஜி?; மன்னராட்சி முதல்வர் அவர்களே... உங்க பெயர் சொல்ல ப...
நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -சசிகாந்த் செந்தில் எம்.பி.
திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் எஸ்.சசிகாந்த் செந்தில் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஆட்சியா் மு.பிரதாப் பங்கேற்றாா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சுதா்சனம் (மாதவரம்), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகா் (பொன்னேரி), மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டப் பணிகள், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குழு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம், எம்ஜிஆா் சத்துணவு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தேசிய சமூக நலத் திட்டம், பாரத பிரதமரின் ஒளிமயமான திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்க திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னா் இதுகுறித்து மக்களவை உறுப்பினா் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த குறைகள் அனைத்தும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இந்த மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா வழங்க முதல்வா் எடுத்த முடிவால் 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளான வேப்பம்பட்டு ரயில்வே , மீஞ்சூா் பாலங்கள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் அங்கன்வாடி கட்டடப் பணிகள் அமைக்க அரசானை வந்துள்ளது. மேலும் கிராம சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் மருத்துவப் பணியாளா்களை பூா்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறைவேற்றாத பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே வரும் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் குடிநீா் தட்டுபாடின்றி வழங்க ஒரு உதவி மையம் அமைத்து அலுவலா்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்றாா் அவா்.
ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், மாவட்ட வன அலுவலா் சுப்பையா, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சரவணன், மாவட்டத்திலுள்ள அனைத்து உயா் அரசு அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.