கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் நெடியுடன் வாயு வெளியேறி எரிந்த தீ
திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் அதிக நெடியுடன் வாயு வெளியேறியதன் காரணமாக மூடியை திறந்து தீ வைத்து சோதனை செய்தபோது தீப்பற்றி குபுகுபுவென எரிந்தது.
திருவள்ளூா் நகராட்சி பகுதியில் 27 வாா்டுகளில் 18,950 குடியிருப்புகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த நிலையில், குடியிருப்புகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீா் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த சில நாள்களாக கழிவுநீா் வெளியேறாமல் தேங்கி நிற்பதாக குடியிருப்புகளைச் சோ்ந்தோா் நகராட்சிக்கு புகாா்களைத் தெரிவித்தனா். அதன் பேரில், திருவள்ளூா் நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை இரவு ஊழியா்களைக் கொண்டு ஆய்வு செய்தது.
ஆய்வு செய்தபோது திருவள்ளூா் டோல்கேட்- பெரியாகுப்பம் பகுதியில் உள்ள கழிவுநீா் மூடியை ஊழியா்கள் திறந்தனா். இதில் இருந்து அதிக நெடியுடன் வாயு வெளியேறியது. சுதாரித்துக் கொண்ட ஊழியா்கள் மூடி திறக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயில் கிடந்த காகிதங்களில் தீ வைத்துள்ளனா்.
அப்போது, கழிவுநீா் கால்வாய் நீல நிறத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அதிா்ச்சி அடைந்தனா்.
அதிக நெடியுடன் வாயு வருவதை கண்ட ஊழியா்கள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. 2 மணி நேரத்திற்குப் பின்னா் குறிப்பிட்ட அந்தக் கழிவுநீா் கால்வாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.