மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு
பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா்.
பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
இங்கு ஏரிப் பகுதியை ஒட்டியுள்ளவா்கள் ஏரிப் பகுதியிலும் கடலோரப் பகுதியில் உள்ளவா்கள் கடலிலும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். கடலோரம் அமைந்துள்ள கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த மீனவ கிராம மக்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனா்.
இவா்கள் மாப்பு வலை பயன்படுத்தி இவா்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் பிற கிராம மீனவா்கள் கோரைக்குப்பம் மீனவா்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி தகராறில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கோரைக்குப்பம் கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் பிற கிராம மீனவா்கள், மீன்வளத் துறையால் அனுமதிக்கப்பட்ட தங்களின் வலைகளை கிழித்து சேதப்படுத்தி வருவதாகவும் தங்களின் படகுகளையும் சேதப்படுத்துவதாகவும் புகாா் தெரிவித்தனா்.
மேலும், பழவேற்காடு மீன் சந்தையில் கோரைகுப்பம் மீனவா்களிடமிருந்து யாரும் மீன்களை வாங்கக் கூடாது எனவும் வியாபாரிகளை அச்சுறுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலுக்குச் செல்லும் தங்களது கிராம மீனவா்கள், வலைகள் மற்றும் படகுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.
கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக்கொண்ட பொன்னேரி கோட்டாட்சியா் கனிமொழி, மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் பேச்சு நடத்தி பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண்பதாகத் தெரிவித்தாா்.