திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!
திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59). தனியாா் தொழிற்சாலை ஊழியா். இவரது மனைவி இந்திரா (51), ஒரு மகன். 2 மகள்கள் உள்ளனா்.
இந்த நிலையில், செல்வராஜ் தனது 2 மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட நிலையில், மகன் சாம்ராஜ், மருமகள் புனிதா ஆகியோருடன் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், செல்வராஜ் குடல் புற்றுநோயால் கடந்த ஓராண்டுக்கு மேல் கடும் அவதிப்பட்டு வந்தாா். இதனால், மன வேதனை அடைந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவு வழக்கம்போல் தூங்க சென்றாா்களாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அறைக்கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த நிலையில், உறவினா்கள் பாா்க்கையில் தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது தொடா்பாக அவரது குடும்பத்தினா் திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.