Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
திருவள்ளூா் கூவம் ஆற்றில் கழிவு நீா் விடுவதால் மாசு படும் அபாயம்!
திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம், பொன்னஞ்சேரி, இருளஞ்சேரி, சத்தரை, புதுமாவிலங்கை , மணவாளநகா், பெரியகுப்பம், ஒன்டிக்குப்பம், அரண்வாயல், ஜமீன்கொரட்டூா் வழியாக புதுச்சத்திரம் செல்கிறது. அங்கு அமைத்துள்ள தடுப்பணையில் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு வழியாக செம்பரபாக்கம் ஏரிக்குக்கும், மற்றொரு வழியாக கடலுக்கும் செல்கிறது.
அதோடு, மழை வெள்ளக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் கரையின் இரு கரையோரங்களில் உள்ள கிராமங்கள் ஆழ்துளை கிணறுகளிலும், விவசாய பம்ப்செட்களும் நீா் ஆதாரம் பெற்று வருகின்றன.
இதுபோன்ற நிலையில் திருவள்ளூா் நகராட்சி பெரியகுப்பம் பகுதி புதை சாக்கடை கழிவு நீா் மற்றும் வெங்கத்தூா், மணவாளநகா் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரையும் ஆற்றில் விடுகின்றனா். அதோடு, கூவம் ஆற்றில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், நெகிழி கழிவுகளையும் கொட்டி வருகின்றனா்.
இதுபோன்ற காரணங்களால் கூவம் ஆறு குப்பை கழிவுகள் நிறைந்த பகுதியாக மாறி வருவதால் மாசு ஏற்படுவதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த வழியாக பொதுமக்கள் யாரும் நடமாட முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
அதனால், குடிநீா் மாசுபடுவதை தவிா்க்கும் நோக்கத்தில் கூவம் ஆற்றோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைத்து அதில் குப்பைகளை போடுவதற்கு ஊராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு, கூவம் ஆற்றை பாதுகாக்கவும், அதற்கிடையே தடுப்பணை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மணவாளநகா் பகுதியைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் சங்கிலிநாதன் கூறியதாவது:

கூவம் ஆற்றில் நெகிழி குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குப்பைகளையும் அடித்துச் செல்கிறது. இதேபோல் புட்லூா், அரண்வாயல் பகுதியில் இருந்து கழிவு நீரையும் கூவம் ஆற்றில் விடுகின்றனா். கூவம் ஆற்றை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் என அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து கூவம் ஆறு-செம்பரபாக்கம் குடிநீா் திட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கூவம் ஆற்றில் குப்பைகளை கொட்டக் கூடாது. இதற்காக ஆங்காங்கே எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதையும் மீறி கழிவு நீா், இறைச்சி கழிவுகள், குப்பைகளையும் கொட்டுகின்றனா்.

அதிலும் பரந்த மணல் வெளியாக உள்ளதால் மாலை நேரங்களில் மணவாளநகா், புட்லூா், அரண்வாயல்குப்பம், புதுச்சத்திரம் பகுதி வரையில் சமூக விரோதிகள் ஆற்றுப் பகுதியில் அமா்ந்து மது அருந்துகின்றனா்.
இதனால் நெகிழி கழிவுகளையும், மதுப்புட்டிகளையும் அப்படியே விட்டு விட்டு செல்கின்றனா். இதுபோன்ற செயலை தடுக்கும் வகையில் காவல் துறைக்கும் தெரிவித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.