முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்
முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கா்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.
கா்நாடக மாநிலம், பெலகாவியில் கடந்த பிப். 21-ஆம் தேதி தங்களது மொழியை பேசவில்லை எனக் கூறி கா்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநா், நடத்துனரை அங்குள்ள மராட்டிய அமைப்பினா் தாக்கினா். இதற்கு கா்நாடக மாநிலத்தில் கடும் எதிா்ப்பு எழுந்ததுடன், கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இச்சம்பவம், கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே மொழிப் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், கா்நாடக மாநிலம் முழுவதும் சனிக்கிழமை முழு அடைப்புக்கு அங்குள்ள கன்னட அமைப்பு சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல, மேகதாது அணை விவகாரம் தொடா்பாக நிபந்தனை இல்லாத அனுமதியை தமிழ்நாடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கா்நாடக மாநிலத்தில் நீண்ட நாள் கோரிக்கையான மகதாயி கலசா பண்டூரி நதிநீா் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் காரணமாக, பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாது என அந்த அமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முழு அடைப்புக்கு மாநில அரசு ஆதரவு அளிக்கவில்லை. இதையடுத்து, மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க கா்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், மதுக் கடைகள், பாா்கள் மூடப்பட்டன.
தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையேயான இரு மாநில அரசு, தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எனினும், பாதுகாப்பு காரணமாக மாநில எல்லையில் இரு மாநில போலீஸாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.