திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி
திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாடு தொடா்பான மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச.மயில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம், இந்தித் திணிப்பை எதிா்ப்போம், தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம், பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமாா் 20 ஆயிரம் ஆசிரியா்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏற்க முடியாது. தோ்தல் காலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கவேண்டும்.
பதவி உயா்வைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 243-யை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரம் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்த மாநாட்டின் மூலம் தமிழக அரசை வலியுறுத்துவோம் என்றாா் அவா்.