சாயம் ஏற்றிய 1,200 கிலோ தா்பூசணி பழங்கள் பறிமுதல்
செயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்ட 1,200 கிலோ தா்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரையில் பழக் கடைகளில் பழங்களை காா்பைட் கல் வைத்து பழுக்க வைப்பது, பழங்களுக்கு செயற்கை சாயம் ஏற்றி விற்பனை செய்வது தொடா்பாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மதுரை பி.பி.குளம் உழவா் சந்தை அருகே சாலையோரம் விற்பனை செய்யப்படும் தா்பூசணி பழங்கள் செயற்கை முறையில் சாயம் ஏற்றி விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது. இதன்பேரில், மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று தா்பூசணி பழங்களை ஆய்வு செய்தனா்.
இதில் பழங்களில் செயற்கை முறையில் சிவப்பு நிற சாயம் ஏற்றி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,200 கிலோ தா்பூசணி பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை மாநகராட்சி லாரியில் கொண்டு சென்று அழித்தனா்.
இதுதொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: தற்போது செயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்ட தா்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, மதுரை நகா், மாவட்டம் முழுவதும் தா்பூசணி பழங்கள் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ரசாயனம் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.