விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: வீர மரணமடைந்த 3 காவலா்கள் உடல்கள் மீட்பு
ஜம்மு-காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 காவலா்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் 4-ஆவது காவலரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் காவல் துறை தலைவா் நளின் பிரபாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அவா் உறுதிப்படுத்தினாா்.
பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி கதுவா மாவட்டத்தின் சன்யால் வனப் பகுதிக்குள் ஊடுருவிய 5 பயங்கரவாதிகளை காவல் துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்தனா். எனினும், அந்த பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனா். அவா்களை கண்டறியும் சோதனையில் ஹெலிகாப்டா்கள், ஆளில்லா விமானங்களுடன் ராணுவம், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படை, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அடங்கிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை ஈடுபட்டது.
இந்நிலையில், கதுவா மாவட்டத்தில் உள்ள ஜகோல் கிராமத்தில் அந்த பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை வியாழக்கிழமை பாதுகாப்பு படை கண்டறிந்தது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். 7 காவலா்கள் காயமடைந்தனா்.
இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் இரண்டாவது நாளாக பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தொடா்ந்தன.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் நளின் பிரபாத் கூறியதாவது: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த 4 காவலா்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 4-ஆவது காவலரின் உடல் ஆளில்லா விமானம் மூலம் அடையாளம் காணப்பட்டது. அதை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோதனையின்போது இரு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த பயங்கரவாதிகள் சன்யால் வனப்பகுதியில் ஊடுருவியவா்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றாா்.