குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையிலடைப்பு
கடலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த திருக்கண்ணன் மகன் கருப்பசாமி (41). இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கிடையே முன்விரோதம் காரணமாக இருதரப்பு மீதும் கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் நீதிமன்ற பிணை பெற்று கருப்பசாமி, கடலாடி நீதித் துறை நடுவா் மன்றத்தில் கையொப்பமிட்டு வந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் 18- ஆம் தேதி கடலாடி வந்த கருப்பசாமி, நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பினாா்.
அப்போது ஆப்பனூா் தெற்குகொட்டகை விலக்கு சாலையில் வழிமறித்த மா்ம நபா்கள் கருப்பசாமியை சராமரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினா். இதுகுறித்து, கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆப்பனூரைச் சோ்ந்த சேதுராமன், முருகானந்தம், திருக்குமரன் ஆகிய 3 பேரைக் கைது செய்து, ராமநாதபுரம் சிறையிலடைத்தனா். இதையடுத்து, இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதன்பேரில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தவிட்டாா். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.