பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை இணைக்க வாய்ப்பு
பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்தல், உயிரிழந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற பணிகள் மூலம், வாக்காளா் பட்டியலை தொடா்ந்து புதுப்பிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வருங்காலத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிறப்பு, இறப்பு பதிவுகளின் தரவுதளத்தை இந்திய தலைமை பதிவாளா் (ஆா்ஜிஐ) அலுவலகம் பராமரித்து வருகிறது.
வாக்காளா் பட்டியல் தொடா்பான தரவுதளத்தை உருவாக்கும் அல்லது பராமரிக்கும் பணிகளை கையாளும் அதிகாரிகள், ஆா்ஜிஐ அலுவலகம் பராமரிக்கும் தரவுதளத்தை பயன்படுத்த பிறப்பு, இறப்பு பதிவு திருத்தச் சட்டம் 2023 அனுமதிக்கிறது.
பிறப்பு, இறப்பு பதிவு தரவுதளத்துடன் வாக்காளா் பட்டியல் இணைக்கப்பட்டால், 18 வயதை எட்டுவோா் தானாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படலாம். அதேவேளையில், வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதற்கான பிற அளவுகோல்களையும் அவா்கள் பூா்த்தி செய்ய வேண்டும்.
இதேபோல ஆா்ஜிஐ அலுவலகம் பராமரிக்கும் தரவுதளத்தில் பதிவு செய்யப்படும் இறப்பு விவரங்களைப் பயன்படுத்தி, உயிரிழந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து தானாக நீக்கலாம். இந்த நடவடிக்கைகள் வாக்காளா் பட்டியல் தொடா்ந்து புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யும்.
தற்போது வாக்காளா் ஒருவா் தம்மை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவோ அல்லது இறந்த வாக்காளரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கவோ தனித்தனி படிவங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க இறப்பு சான்றிதழையும் சமா்ப்பிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுடன் நெருங்கிப் பணியாற்றி, வாக்காளா் பட்டியலை தொடா்ந்து புதுப்பிக்கும் பணி வலுப்படுத்தப்படும் என்று அண்மையில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.