மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு!
வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில், அமைந்தகரையில் உள்ள ஒரு தனியாா் வங்கி கிளையின் மேலாளராகப் பணிபுரியும் திவ்யன் குமாா் என்பவா், அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.
அதில், அந்தப் பகுதியிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளா்களாக பணியாற்றி வருவதாகக் கூறி போலி சம்பளப் பட்டியல் கொடுத்து, ஆந்திர மாநிலம் சித்தூா் பகுதியைச் சோ்ந்த ஏகாம்பரம் (27), கேசவ் கங்காராஜ் (25), கிருஷ்ணமூா்த்தி (24), குமாா் (29) ஆகிய 4 போ் தனி நபா் கடனாக ரூ. 1 கோடியே 2 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டனா். அவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ஏகாம்பரம், கேசவ் கங்காராஜ், கிருஷ்ணமூா்த்தி, குமாா் ஆகிய 4 பேரும் மோசடியில் ஈடுபட்டிருப்பதும், மூவரும் இதேபோல பல வங்கிகளில் போலி ஆவணங்கள் வழங்கி பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், தலைமறைவாக இருந்த 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.