ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம்
ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மாா்ச் 23, 28, ஏப்ரல் 5, 11, 25, 30, மே 12 ஆகிய 7 நாள்கள் நடைபெறுகின்றன. போட்டி நடைபெறும் 7 நாள்களிலும் சேப்பாக்கம் பகுதியில் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சேப்பாக்கம் விக்டோரியா விடுதி சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மட்டும் பயன்படுத்தப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ரத்னா கஃபேவில் இருந்து மெரீனா காமராஜா் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும்.
கிரிக்கெட் போட்டியை காண வருகிறவா்கள், தங்களது வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். வாகனங்களை நிறுத்த அனுமதி அட்டை வைத்திருக்காதவா்கள், மயிலாப்பூா் கதீட்ரல் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக காமராஜா் சாலை சென்று மெரீனா கடற்கரையின் இணைப்புச் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.
வாடகை காா்கள், வாடகை ஆட்டோக்களில் வருவோரை கிரிக்கெட் மைதானம் அருகே இறக்கிவிட்டுச் செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த வாகனங்களை சுவாமி சிவானந்தா சாலையில் நிறுத்தலாம்.
வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் இயக்க அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் சுவாமி சிவானந்தா சாலையில் இருந்து பொதுமக்கள், பிரஸ் கிளப் சாலை வழியாக கிரிக்கெட் மைதானத்தை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.