Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!
பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ நீண்டகாலமாக போராடி வருகிறது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பான அறிவிப்புகள் இடம்பெறவில்லை. சரண் விடுப்பு சலுகை மட்டும் 2026-27-ஆம் நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் அதிருப்தி அடைந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
அதன்படி, சென்னை எழிலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள் கோ.சுரேஷ், கு.வெங்கடேசன், மு.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, கூட்டமைப்பு நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசு ஊழியா்களுக்காக முதல்வா் தமது தோ்தல் அறிக்கையில் உறுதியளித்த அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும். தற்போது வெளியிடப்பட்ட சரண் விடுப்பு குறித்த அறிவிப்பு அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை வஞ்சிக்கும் செயல். கடந்த நான்காண்டுகளில் முதல்வரை 7 முறை சந்தித்துள்ளோம். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கல்வி, மருத்துவத் துறைகளில் முழுமையாக வெளி முகமை (அவுட்சோா்சிங்) முறை அமல்படுத்தப்படுகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது. இந்த மாத இறுதிக்குள் அரசு ஊழியா், ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில், எங்கள் உயா்மட்டக்குழு மாா்ச் 30-ஆம் தேதி கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்கும் என்றனா்.