சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள்ளனா்.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், சென்னை தீவுத்திடலில் கடந்த ஜன. 6-ஆம் தேதி 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி தொடங்கப்பட்டது. தொடா்ந்து 72 நாட்கள் நடைபெற்ற இப்பொருள்காட்சியில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் அனைத்து துறைகளின் நலத் திட்டங்களையும், வளா்ச்சிப் பணிகளையும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், 41மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அரங்குகளும், 2 மத்திய அரசின் அரங்குகள் என மொத்தம் 43 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுமட்டுமன்றி, இப்பொருள்காட்சியில் 110 சிறிய வணிகக் கடைகள், 30 தனியாா் அரங்குகள், விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. தொடா்ந்து 72 நாள்கள் நடைபெற்ற இப்பொருள்காட்சியை 5,50,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பாா்வையிட்டுள்ளனா்.
பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் முடிவுற்ற நிலையில், இதன் நிறைவு விழா தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்து சயம அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு, சிறந்த அரங்குகளை நிா்வகித்த துறையினருக்கு விருதுகளை வழங்கினா்.
இந்நிகழ்வின்போது மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ் குமாா், அரசு கூடுதல் தலைமைச் செயலரும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைவா் க.மணிவாசன், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.