ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி
ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
தலைநகர் புது தில்லியில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த மருத்துவமனை, பொது-தனியார் ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லி அரசு ஒரு ரூபாயுக்கு வழங்கிய நிலத்தில் அப்போலோ குழுமத்தால் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனையை நிர்வகிக்க இந்திரபிரஸ்தா மருத்துவக் கழக நிறுவனம் (ஐஎம்சிஎல்) தொடங்கப்பட்டது.
இந்தக் கூட்டு முன்னெடுப்பில் தில்லி அரசு-ஐஎம்சிஎல் இடையே கையொப்பான குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் மூன்றில் ஒரு பங்கு உள்நோயாளிகளுக்கும் 40 சதவீத வெளிநோயாளிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதாவது, லாப-நஷ்டமின்றி சேவை நோக்கில் இந்த மருத்துவமனை செயல்பட வேண்டும்.
ஆனால், ஏழை நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சையளிக்க மறுத்து, முழுமையாக வணிக நிறுவனமாக இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை மாறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி தில்லி வழக்குரைஞர்கள் அமைப்பு ஒன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 2009-இல் அளித்த தீர்ப்பில், குத்தகை ஒப்பந்த விதிமுறைகளை இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாக்கிழமை நடைபெற்றது.
அப்போது, மருத்துவமனை நிர்வாகத் தரப்பு வழக்குரைஞர், "கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தில்லி அரசுக்கும் 26 சதவீதப் பங்கு இருக்கிறது. மருத்துவமனை வருவாயில் தில்லி அரசும் சமமாகப் பயனடைகிறது' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், "குத்தகை ஒப்பந்த விதிமுறைகளை இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மீறியிருப்பதை அறிகிறோம். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், மருத்துவமனையைக் கைப்பற்ற எய்ம்ஸுக்கு உத்தரவிட நேரிடும். ஏழைகளுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கத்தை மறந்து, மருத்துவமனை லாபத்தில் தில்லி அரசும் வருவாய் ஈட்டுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.
மருத்துவமனைக்கான நிலத்துக்கான 30 ஆண்டு கால குத்தகை, கடந்த 2023-ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டது. எனவே, குத்தகை ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதை மத்திய, தில்லி அரசுகள் கண்டறிய வேண்டும்.
ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால் அதற்கு பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் தரவுகள் உள்ளிட்ட விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்' என்றனர்.
மேலும், மருத்துவமனை நிர்வாகமும் தனது தரப்பு விளக்கத்தை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்து, அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.