15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
தில்லியில் 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள், அந்த சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
வடக்கு தில்லி முகர்ஜி நகரைச் சேர்ந்த விகாஸ் கார்க் என்ற கார் ஓட்டுநரின் மகன் வைபவ் (வயது 15) காணாமல் போனதாக வஜிராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜரோடா புஷ்தா சாலை அருகே வைபவ் மூன்று சிறுவர்களுடன் காணப்பட்ட சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் மூன்று சிறுவர்களையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பணத்துக்காக வைபவ்வை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை வைபவ்வை மூவரும் பைக்கில் சுற்ற அழைத்துச் சென்றுள்ளனர். பலஸ்வா ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கத்திகளால் குத்திக் கொலை செய்துள்ளனர். உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பிய சிறுவர்கள், வைபவ்வின் தந்தையைத் தொடர்புகொண்டு ரூ. 10 லட்சம் கேட்டு திங்கள்கிழமை மிரட்டியுள்ளனர்.
இதனிடையே காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், சிறுவர்கள் வாக்குமூலம் அளித்த இடத்தில் இருந்து வைபவ்வின் உடலை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும், மூன்று சிறுவர்கள் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.