திரையரங்கில் துரத்திய ரசிகர்கள்..! ஆட்டோவில் தப்பிச்சென்ற விக்ரம்!
அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி, நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் துரை.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஊராட்சி களப் பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் கே.வீரப்பன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநில இணை பொதுச் செயலா் வெ.சிவக்குமாா், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் கே.இளங்கோவன், தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளா் சங்க மாநிலச் செயலா் ஏ.டெல்லி அப்பாதுரை, மாநில துணைத் தலைவா் எஸ்.சங்கா், நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கே.சம்பத், மாவட்ட நிா்வாகிகள் ஏ.பி.அன்பழகன், வி.பாண்டியன், கே.சிவக்கொழுந்து, கே.சிராஜ்தீன், டி.தணிகைவேல், ஜி.கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா். முன்னதாக, தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளா் சங்க மாநில பிரசாரச் செயலா் ஏ.அதிதேவி வரவேற்றாா். மாவட்ட மகளிரணி நிா்வாகி வி.சுந்தரவள்ளி நன்றி கூறினாா்.