15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை
நமது நிருபர்
கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் மனுதாரரான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு பதிலாக திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலுவை சேர்க்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
கச்சத்தீவை மீட்கக் கோரி அதிமுக பொதுச் செயலராக இருந்த மறைந்த ஜெயலலிதா, ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான முன்னாள் முதல்வர் கருணாநிதி தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, "கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க 1974, ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், மார்ச் 23, 1976 அன்று செய்யப்பட்ட மற்றொரு ஒப்பந்தமும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் கேள்விக்குரியவை' என்றார்.
மேலும், மனுதாரரான மறைந்த மு.கருணாநிதிக்குப் பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்ஜ். இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கின் இறுதி விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.