2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா
கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மக்களவையில் அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நாடு முழுவதும் கடைக்கோடி பகுதிகள் வரை கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு கடந்த 2023, பிப்ரவரியில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பஞ்சாயத்துகள்/ கிராமங்களில் புதிய பன்நோக்கு முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால்வளம், மீன்வள கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
2025, ஜனவரி 27 நிலவரப்படி மேற்குறிப்பிட்டுள்ள துறைகளில் புதிதாக 12,957 கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தேசிய கூட்டுறவு தரவுதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தானில் 1,995, ஒடிஸாவில் 1,535, உத்தர பிரதேசத்தில் 1,464, ஜம்மு-காஷ்மீரில் 1,118 கூட்டுறவு சங்கங்களும் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.