புதுவை நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
புதுவை அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுவை மாநில சட்டப்பேரவையில் கடந்த 12-ஆம் தேதி முதல்வா் என்.ரங்கசாமி 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். அதில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளா்ச்சிக்கான திட்டங்கள் ஏதுமில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சிகள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், புதுச்சேரி மாதா கோவில் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (லெனினிஸ்ட்) ஆகியற்றின் சாா்பில் கண்டன பெருந்திரள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் துணைச்செயலா் கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் வி.பெருமாள், கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலா் புருஷோத்தமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் நிா்வாகிகள் தினேஷ்பொன்னையா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாரா கலைநாதன் உள்ளிட்டோா் பேசினா்.