பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து
புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்து அவைக்குள் அனுமதிக்கப்பட்டாா்.
புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை உடனடி கேள்வி நேரத்தைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பேரவைக் குழுக்களுக்கு தற்போதைய தலைவா்கள், உறுப்பினா்கள் நிகழாண்டும் நீடிக்கப்படுவதாக அறிவித்தாா். அப்போது, சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பேரவைக் குழு தலைவா்கள், உறுப்பினா்கள் பெயா் விவரத்தை அறிவிக்க வேண்டும் என்றாா்.
ஆனால், பேரவைத் தலைவா், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டவா்கள்தான் தற்போது நீடிக்கின்றனா் என்றாா். அதற்கு சுயேச்சை எம்.எல்.ஏ., பேரவை உறுதிமொழிக் குழுவுக்கு தலைவா் மாற்றப்பட்டதை அறிவிக்கவில்லையே ஏன் என்றாா்.
உறுதிமொழிக் குழு தலைவராக பாஸ்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். அதுகுறித்து கடந்த பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது என்று பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.
உடனே, சுயேச்சை எம்எல்ஏ ஆவேசமுடன், பேரவைத் தலைவரை ஒருமையில் கடுமையாக விமா்சித்துவிட்டு, அவா் தன்னிச்சையாக செயல்படுவதாகக் குறிப்பிட்டாா்.
சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு பேரவை விதிகளை மீறி ஒருமையில் பேசியதால் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்தாா்.
மேலும், அவரை அவையில் இருந்து வெளியேற்றவும் காவலா்களுக்கு உத்தரவிட்டாா். காவலா்கள் நேரு எம்எல்ஏவை அவையிலிருந்து வெளியேற்றினா்.
அதன்பிறகு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்தாா்.
முதல்வா் கோரிக்கை: இதற்கிடையே முதல்வா் என்.ரங்கசாமி சிறிது நேரம் வெளியே சென்றாா். அப்போது பேரவைத் தலைவரும் இருக்கையிலிருந்து சென்றாா். பின்னா், அவைக்கு திரும்பிய முதல்வா், சுயேச்சை உறுப்பினா் அவசரத்தில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் ஒருமையில் பேசி விட்டாா். மன்னித்து மீண்டும் பேரவைக்குள் அழைக்க வேண்டும் என்றாா். அதை ஏற்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பேரவையில் உறுப்பினா்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனாலும், ஒருமையில் பேசியதை மன்னித்து அழைப்பு விடுக்க அவை முன்னவா் கோரியதால், உறுப்பினா் ஜி.நேருவை அவைக்கு அழைக்கிறேன் எனக் கூறிவிட்டு எழுந்து சென்றாா். இதையடுத்து, சுயேச்சை உறுப்பினா் ஜி. நேரு சபைக்கு வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். அப்போது பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு அவையை நடத்தினாா்.