வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? ராஜஸ்தானுடன் இன்று சென்னை மோதல்!
RR vs KKR: `அது அவ்ளோதான் முடிஞ்சு' தடுமாறிய ராஜஸ்தான்; அலட்டாமல் ஆட்டத்தை முடித்த டி காக்
ஐபிஎல் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் கவுகாத்தியில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றமாக கொல்கத்தாவில் சுனில் நரைனுக்குப் பதில் மொயின் அலியும், ராஜஸ்தானில் ஃபரூக்கிக்குப் பதில் ஹசரங்காவும் பிளெயிங் லெவனில் இடம் பிடித்தனர்.

ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி தந்த அரோரா!
ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வாலும், சஞ்சு சாம்சனும் ஓப்பனிங்கில் களமிறங்கினர். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய முதல் ஓவரை பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் வரவேற்க, கடைசி பந்தை சஞ்சு பவுண்டரிக்கு அனுப்பினார். அதையடுத்து, வைபவ் அரோரா வீசிய இரண்டாவது ஓவர் பவுண்டரி எதுவுமின்றி முடிய, ஸ்பென்சர் ஜான்சன் வீசிய மூன்றாவது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் வந்தது. அதே வேகத்தில், வைபவ் அரோரா வீசிய நான்காவது ஓவரை பவுண்டரியுடன் வரவேற்ற சஞ்சு, அதே ஓவரின் ஐந்தாவது பந்தை இறங்கி வந்து ஆட முயன்று கிளீன் போல்டானார்.
அவரைத்தொடர்ந்து கேப்டன் ரியான் பராக் களமிறங்கினார். ஐந்தாவது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா, ஜெய்ஸ்வால் நேராக அடித்த பந்தை கேட்ச் பிடிக்கத் தவறவிட்டார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் ரியான் பராக் ஸ்ட்ரைட்டாக அடித்த சிக்ஸர் உட்பட 13 ரன்கள் வந்தது. மொத்தமாக பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். பவர்பிளே முடிந்த கையோடு தனது ஸ்பின்னர்கள் கையில் பந்தை ஒப்படைத்தார் ரஹானே.

மொயின் - வருண் சூழலில் காலியான ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள்!
அதற்குப் பலனாக, மொயின் அலி வீசிய 7-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே வந்தது. தொடர்ந்து, வருண் சக்ரவர்த்தி வீசிய 8-வது ஓவரில் சிக்ஸ் அடித்த இரண்டாவது பந்திலேயே தூக்கியடிக்க முயன்று கீப்பர் கையில் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார் ரியான் பராக். அடுத்த ஓவரிலேயே, மொயின் அலி வீசிய பந்தை ஹர்ஷித் ராணாவிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்களில் அவுட்டானார் ஜெய்ஸ்வால். அதையடுத்து, வருண் சக்ரவர்த்தி வீசிய 10-வது ஓவரில் ஹசராங்கவும் தூக்கியடிக்க முயன்று ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேற, மொயின் அலி வீசிய 11-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணாவும் கிளீன் போல்டாகி 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

வருண் சக்கரவர்த்தியும், மொயின் அலியும் வீசிய 8, 9, 10, 11 ஓவர்களில் மொத்தமாக 4 விக்கெட்டுகளைத் தாரைவார்த்த ராஜஸ்தான் அணி, 11 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்து மோசமான நிலைக்குச் சென்றது. இந்த இக்கட்டான சூழலில், ராஜஸ்தானை சரிவிலிருந்து மீட்க துருவ் ஜோரலும், இம்பேக்ட் பிளேயர் ஷுபம் துபேவும் (சஞ்சுவுக்குப் பதில்) கைகோத்தனர். 12-வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வர, 13-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் துருவ ஜோரல் மூலம் கிட்டத்தட்ட 5 ஓவர்களுக்குப் பிறகு ஒரு பவுண்டரி வந்தது. அந்த ஓவரோடு மொயின் அலியும் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுடன் தனது கோட்டாவை முடித்தார்.
மீண்டுவரப் போராடிய ராஜஸ்தான்
அதையடுத்து, 14-வது ஓவரில் அட்டாக்குக்கு வந்த ஹர்ஷித் ராணாவின் முதல் இரு பந்துகளில் ஒரு கேட்ச், ஒரு இன்சைட் எட்ஜ் போல்ட் மிஸ்ஸாகி இரண்டு பவுண்டரிகள் செல்ல, பவர்பிளேவுக்குப் பிறகு ராஜஸ்தானுக்கு இந்த ஓவரில் இரட்டை இலக்கத்தில் 11 ரன்கள் கிடைத்தது. எல்லாம் கொஞ்சம் சரியாகச் சென்றுகொண்டிருந்த வேளையில், வைபவ் அரோரா வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தில் ரஸல் கையில் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் வெளியேறினார் ஷுபம் துபே. 15 ஓவர்கள் முடிவில் 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் தத்தளித்த வேளையில் ஹிட்டர் ஹெட்மயர் களத்துக்கு வந்தார்.

ராஜஸ்தான் லைன்அப்பில் கடைசி பேட்ஸ்மேனும் இவரே. இந்த விக்கெட்டையும் வீழ்த்தும் முனைப்பில் தன்னுடைய கடைசி ஓவராக ஆட்டத்தின் 16-வது ஓவரை வீச வந்தார் வருண் சக்ரவர்த்தி. ஆனால், அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே ராஜஸ்தானுக்குக் கிடைத்தது. வருண் சக்ரவர்த்தி மொத்தமாக 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளுடன் வெளியேற அவருக்குப் பதில் இம்பேக்ட் பிளேயராக ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி உள்ளே வந்தார். மொத்தமாக, மொயின் அலி, வருண் சக்ரவர்த்தி வீசிய 8 ஓவர்களில் ராஜஸ்தான் வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஜொலித்த ஸ்பின் - பேஸ் பவுலிங் கூட்டணி
கடைசி நான்கு ஓவர்கள் வந்துவிட்டது இனியாவது பவுண்டரிகள் வருமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் ராஜஸ்தானுக்கு 11 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து, ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 18-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் ராஜஸ்தானுக்கு 8 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை வீசவந்த ஹர்ஷித் ராணா தனது முதல் பந்திலேயே 33 ரன்களுடன் நன்றாக ஆடிக்கொண்டிருந்த துருவ் ஜோரலை யார்க்கர் போட்டு போல்டாக்கினார். ஆனால், அவரைத்தொடர்ந்து பேட்டிங் வந்த ஆர்ச்சர் தனது முதல் பந்திலேயே ஆஃப் சைடில் சிக்ஸ் அடிக்க, ஓவரின் கடைசி பந்தில் ஆங்க்ரிஷ் ரகுவன்ஷியிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்னில் வெளியேறினார் ஹெட்மயர்.

19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் அடித்தது ராஜஸ்தான். இறுதியாக, கடைசி ஓவரில் முதல் பந்தை சிக்ஸ் அடித்த ஆர்ச்சரை ஐந்தாவது பந்தில் கிளீன் போல்டாக்கி தனது பெயரிலும் ஒரு விக்கெட்டைப் பதிவுசெய்தார் ஸ்பென்சர் ஜான்சன். மொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். இந்த சீசனில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோரும் இதுவே. மறுபக்கம், முதல் போட்டியில் கேப்டன்சி தொடர்பாக விமர்சனங்களுக்குள்ளான ரஹானே, இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தி 151 ரன்களில் ராஜஸ்தானை மட்டுப்படுத்தினார். கொல்கத்தாவில் மொயின் அலி, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
நிதானமாகத் தொடங்கிய மொயின் - குயின் கூட்டணி!
அதைத்தொடர்ந்து, 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மொயின் அலியும், குயின்டன் டி காக்கும் ஒப்பனர்களாகக் களமிறங்கினர். மைதானம் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருப்பதால் ராஜஸ்தான் அணியும் நம்பிக்கையுடன் பந்துவீசத் தொடங்கியது. கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சர், முதல் ஓவரில் இரண்டு வைடு மட்டும் போட்டு 6 பந்துகளையும் டாட் பால் ஆக்கினார். அதையடுத்து, இரண்டாவது ஓவரை வீசுமாறு ஸ்பின்னர் தீக்ஷனாவை அழைத்தார் ரியான் பராக். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் மட்டும் வந்தது. பின்னர், ஆர்ச்சர் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் கொல்கத்தாவுக்கு 13 ரன்கள் சேர்ந்தது.

அடுத்து, தீக்ஷனா வீசிய நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 9 ரன்கள் வந்தது. அவரைத் தொடர்ந்து கேப்டன் ரியான் பராக் வீசிய ஓவரில் 6 ரன்கள் வந்தது. பவர்பிளேயின் கடைசி ஓவரை 5 ரன்களுடன் சந்தீப் சர்மா நிறுத்த, 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் குவித்தது கொல்கத்தா. பார்ட்னர்ஷிப் நான்றாக பில்ட் ஆனா நேரத்தில், ரியல் பராக் வீசிய 7-வது ஓவரின் முதல் பந்திலேயே மொயின் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அதையடுத்து, கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரஹானே கிரீஸுக்கு வந்தார். அந்த ஓவரில் நான்கு ரன்கள் வர, ஹசரங்கா வீசிய 8-வது ஓவரில் 11 ரன்களும், ரியான் பராக் வீசிய 9-வது ஓவரில் 6 ரன்களும் வந்தது.
ஹசரங்கா சூழலில் சிக்கிய ரஹானே!
அதையடுத்து தீக்ஷனா வீசிய 10-வது ஓவரில் எல்பிடபிள்யு ஆன டி காக் ரிவ்யூ எடுத்து தனது விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்களுடன் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தது. ஆனால், 11-வது ஓவரில் ஹசரங்கா வீசிய முதல் பந்தையே சிக்ஸர் அடிக்க முயன்று துஷார் தேஷ்பாண்டே கையில் கேட்ச் கொடுத்து 18 ரன்களில் அவுட்டானார் ரஹானே.

அப்போது, டி காக்குடன், இம்பேக்ட் பிளேயர் ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி கைகோத்தார். அதே ஓவரில், சிக்ஸ் அடித்து தனது அரைசைதத்தையும் கடந்தார் டி காக். 12, 13-வது ஓவர்களில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் கொல்கத்தாவுக்கு 23 ரன்கள் கிடைத்தது. நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி, அடுத்த மூன்று ஓவர்களில் எந்த பதட்டமும் இல்லாமல், பெரிய ஷாட்டுக்கான முயற்சிக்கும் செல்லாமல் 22 ரன்கள் சேர்த்தது. 16 ஓவர்கள் முடிவில் வெறும் இரண்டு விக்கெட் இழப்புக்கு 125 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது கொல்கத்தா.
97 நாட் அவுட் - சதம் மிஸ் ஆனாலும் மேட்சை முடித்துக் கொடுத்த டி காக்!
டி காக் சதமடிக்க 21 ரன்கள் தேவைப்பட்டது. 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் கொல்கத்தா வெற்றி. அத்தகைய சூழலில், ஐபிஎல் புதிய விதிப்படி இரண்டாவது பந்து கொண்டுவரப்பட்டது. தீக்ஷனா வீசிய 17-வது ஓவரில் 10 ரன்கள் வந்தது. அதைத்தொடர்ந்து, ஆர்ச்சர் வீசிய 18-வது ஓவரின் முதல் இரு பந்துகளை ஃபோர், சிக்ஸ் அடித்து 91 ரன்கள் தொட்டார் டி காக். 7 ரன்கள் எடுத்தால் கொல்கத்தா வெற்றி, 9 ரன்கள் எடுத்தால் டி காக் சதம்.

அந்த நேரத்தில் ஆரச்சரின் கைகளிலிருந்து அடுத்தடுத்து இரண்டு வைடுகள் வரவே கொல்கத்தாவின் வெற்றிக்குத் தேவையான ரன் ஐந்தாகக் குறைந்தது. அடுத்த பந்தையே டி காக் சிக்ஸ் அடித்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வெற்றி பெறவைத்தார். ஆனால், 97 நாட் அவுட்டில் நூலிழையில் டி காக்கின் சதம் மிஸ்ஸானது. இருப்பினும், ஆட்டநாயகன் விருது அவர் வசமே வந்தது.