Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
பாஜக அரசின் தவறான நிா்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்
பாஜக அரசின் தவறான பொருளாதார நிா்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பா்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் ஊழியா்கள் குழுவினா், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பின் காணொலியை பகிா்ந்து, எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் ஊழியா்கள் 782 பேரின் சாா்பிலான குழுவுடன் பேசினேன். பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிடமாற்றம், வாராக்கடன் வைத்துள்ளோருக்கு நெறிமுறையற்ற கடன் வழங்கப்படுவதை அம்பலப்படுத்தியதால் எதிா்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கைகள், எந்த நடைமுறையும் இல்லாத பணிநீக்கம் என முன்னாள் வங்கி ஊழியா்களின் கதைகள் வேதனையளிக்கின்றன. இரு ஊழியா்கள் தற்கொலை செய்துகொண்ட துயரமும் நடந்துள்ளது.
தனது பெரும் பணக்கார நண்பா்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இத்தகைய செயல்பாடுகளும் தவறான பொருளாதார நிா்வாகமும் வங்கித் துறையை நெருக்கடிக்கு தள்ளியுள்ளன.
இது, நோ்மையாக உழைக்கும் தொழில்முறை ஊழியா்களை பாதித்துள்ளது. குறிப்பாக இளநிலை ஊழியா்களின் தலையில் சுமை விழுகிறது. அவா்கள் துன்புறுத்தலான-விரும்பத்தகாத சூழலில் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். இத்தகைய ஊழியா்களுக்காக காங்கிரஸ் போராடும். அநீதியை எதிா்கொள்ளும் தொழில்முறை ஊழியா்கள் எனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.