பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் விகாஸ் நிகாம் சாா்பில் சரஸ்வதி புஷ்கரம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
தமிழகத்திலிருந்து செல்லும் ரயில் கங்கோதிரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதாா்நாத் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பிற கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படும். இந்த ஆன்மிக பயணத்தில் தமிழகத்திலிருந்து உத்தரகண்ட் ரயிலில் சென்று திரும்புவது, உள்ளூா் பகுதியை சுற்றிப் பாா்க்க போக்குவரத்து வசதி, தங்கும் வசதி, தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலா் வசதி, பயணக் காப்பீடு வழங்கப்படும்.
சென்னையிலிருந்து மே 8-இல் புறப்படும் ரயில் மே 10-ஆம் தேதி ஹரிதுவாா் சென்றடையும். இருவாரம் ஆன்மிக பயணத்துக்கு பின் மே 23-ஆம் தேதி சென்னை வந்தடையும்.
இதில், ஒரு நபா் பயணிக்க சாதாரண வகுப்புக்கு (ஸ்லீப்பா்) ரூ. 58,500, மூன்றடுக்கு ஏசி வகுப்புக்கு ரூ. 70,500, மூன்றடுக்கு ஏசி பிரீமியம் வகுப்புக்கு ரூ. 73,000, இரண்டடுக்கு ஏசி வகுப்புக்கு ரூ. 75,500, முதல் வகுப்புக்கு ரூ. 82,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்லும்போது தேவையான உடைமைகள் மட்டும் எடுத்து சென்றால் போதும்; மற்ற உடைமைகள் ரயிலில் பாதுகாக்கப்படும்.
ரயில்வே அமைச்சகத்தின் மானியத்துடன் கூடிய இந்த யாத்திரைக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 73058 58585 என்ற உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று காா்வல் மண்டல் விகாஸ் நிகாம் அறிவித்துள்ளது.