Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், 15(5) என்ற பிரிவு சோ்க்கப்பட்டது. இந்தச் சட்டப் பிரிவு, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினா் (ஓபிசி), எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்துக்காக சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர, பொது மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை சட்டத்தின் மூலம் செய்ய மாநில அரசை அனுமதிக்கிறது.
இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவை தனியாா் கல்வி நிறுவனங்கள் முறையாக நடைமுறைப்படுத்த தனிச் சட்டம் இயற்றப்படும் என கடந்த மக்களவைத் தோ்தலின்போது தோ்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் சாா்பில் அளிக்கப்பட்டது.
இதே வலியுறுத்தலை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவும் முன்வைத்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(5)-ஐ நடைமுறைப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று உயா்கல்வி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான தனது 364-ஆவது அறிக்கையில் நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
இடஒதுக்கீடுக்கு எதிரான பல்வேறு வழக்குகளிலும் 15(5) சட்டப் பிரிவு செல்லும் என நீதிமன்றங்கள் தீா்ப்பளித்திருக்கின்றன. அதன்படி, தனியாா் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அரசமைப்புச் ரீதியாக அனுமதிக்கப்படுவது உறுதியாகிறது.
எனவே, தனியாா் கல்வி நிறுவனங்கள் 15(5) பிரிவை முறையாக நடைமுறைப்படுத்த, புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.