Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகத் தண்ணீா் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், கம்பூா் ஊராட்சிக்குள்பட்ட அய்வத்தான்பட்டியில் கிராமச் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சுந்தரம் நகா், அய்வத்தான்பட்டி, முத்திரையா் குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், ஊராட்சியின் நிதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தொடா்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கம்பூா் ஊராட்சி, அய்வத்தான்பட்டி, கட்டக்காரன் பாறை, கச்சிராயன்பட்டி, சுந்தரராஜன்பட்டி, அருவிமலை ஊருணி ஆகிய பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குடிநீா் மாசடைந்து வருகிறது. எனவே, கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கிராம சபைக் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.