`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவத...
மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்
மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மாா்கிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு நடைபெறவுள்ள மதுரை தமுக்கம் அரங்கை திங்கள்கிழமை பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்கு உண்டு. நாடு சுதந்திரமடைந்த பின்னரும், மக்களின் அடிப்படை உரிமைகள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கான உரிமைகள், சமூகத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
நாடு சுதந்திரமடைந்த பின்னரும்கூட, கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை எல்லாம் முறியடித்து கம்பீரமாக வளா்ந்து வருகிறது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.
கம்யூனிஸ்டுகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழகம் முழுவதிலுமிருந்து தியாகிகள் நினைவுச் சுடா்கள் எடுத்துவரப்படுகின்றன.
மதுரையில் வருகிற 2-ஆம் தேதி தொடங்கவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி இளைஞா்களுக்கு உந்து சக்தியாக இந்த மாநாடு அமையும் என்றாா் அவா்.