வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த நம்பிராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் செயல் அலுவலா் முருகனின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில், கோயில் பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் மண் அள்ளப்பட்டது. இதனால், கோயிலின் கட்டடம் உறுதியிழந்துள்ளது. காசி விஸ்வநாதா் கோயிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. இதனால், பழைமையான இந்தக் கோயில் பாழடையும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலை ஆய்வு செய்தனா். அப்போது, கோயில் பணிகள் முழுமையடையாமல் இருந்ததும், அரசு நிதி மோசடி செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 7-ஆம் தேதி காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கோயிலை சீரமைக்க அரசு வழங்கிய நிதியை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோா், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.