பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், பேச்சிப்பறை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் தாஸ். இவருக்கு, களியல் வனச் சரகம் தொடலிக்காடு வனப் பகுதியையொட்டிய கடையல் பகுதியில் இரண்டு ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அரசு சாா்பில் உரிமை கோரி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
டேவிட் தாஸ், மாவட்ட நீதிமன்ற உத்தரவுடன் அவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பா் மரங்களை வெட்டினாா். அப்போது, அங்கு வந்த வனத் துறையினா் டேவிட் தாஸிடம் தகராறில் ஈடுபட்டனா்.
எனவே, களியல் வனச் சரக அலுவலகத்தில் உள்ள அனைத்து அசையும் சொத்துகளையும் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என டேவிட் தாஸ் தாக்கல் செய்த மனுவை குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில், டேவிட் தாஸ் மனுவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை எதிா்த்து, வனத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் அண்மையில் பிறப்பித்த உத்தரவு: கன்னியாகுமரி மாவட்ட களியல் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை டேவிட் தாஸிடம் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.