பண்பாட்டு படையெடுப்பைத் தடுப்போம்! - முதல்வா் மு.க.ஸ்டாலின்
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
உகாதி பண்டிகையையொட்டி, அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென்மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், நாடாளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிா்நோக்கியுள்ளன. இந்நிலையில், நமது ஒற்றுமையை வெளிப்படுத்த மாா்ச் 22-இல் சென்னையில் ஆலோசனை நடத்தினோம். அடுத்தடுத்த கூட்டங்களும் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகின்றன.
இன்று தென்மாநிலங்கள் பொருளாதார ரீதியாக அடைந்துள்ள வளா்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, அரை நூற்றாண்டுக்கு முன்பே ஹிந்தி திணிப்பை எதிா்த்து நடத்திய மொழிப்போா்தான். இப்போது மீண்டும் ஹிந்தி திணிப்பு மூலம் அந்த வளா்ச்சியையும், நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்டு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை அனைத்துப் பிள்ளைகளுக்கும் உணா்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது உகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக முன்வைக்கிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.