5 ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக சாப்பிட முயன்று சிக்கிய Influencer; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் ஒருவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயன்று மாட்டியதால், சாப்பிட்ட பஃபே சாப்பாட்டுக்கு 3,600 ரூபாய் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
நிஷு திவாரி, கள்ளத்தனமாக 5 ஸ்டார் விடுதியில் சாப்பிடுவதற்காக, அங்கே தங்கியிருக்கும் விருந்தினர் போல காட்டிக்கொள்ளும் விதமாக தூங்கும் ஆடைகளை அணிந்துகொண்டுள்ளார்.
வீடியோ எடுக்கும் நபருடன் சென்ற அவர், உணவு அறையில் இருந்த பணியாளரிடம் கற்பனையாக ஒரு அறை எண்ணைக் கூறியுள்ளார். அறை எண்ணைக் கேட்ட ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதித்தனர்.
அதன் பிறகு தங்கள் திட்டத்தில் வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்டு அவரும், உடன் சென்ற நபரும் ஆடம்பரமான காலை உணவை சுவைத்துள்ளனர்.
சிக்கிய Influencer
வயிறார உணவருந்திவிட்டு இருவரும் உணவு அறையை விட்டு வெளியேறும்போது, ஹோட்டல் ஊழியர்கள் இருவரையும் மறித்து கேள்வி கேட்டனர்.
அவர்கள் நிஷு கூறிய அறை எண்னை மறுபடியும் சரிபார்த்தனர். ஆரம்பத்தில் அவர்களை சமாளிக்க முயன்ற இன்ஃபுளூயன்சர், பின்னர் தான் ஹோட்டல் விருந்தினர் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
அவர் சாப்பிட்ட உணவுக்கு மட்டும் அவரிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஹோட்டல் ஊழியர்கள் அவரை விட்டனர். அவர் 3,658 ரூபாய் பணம் செலுத்தினார். அவரது வீடியோவின் தலைப்பில், "இலவச உணவு காஸ்டலியான உணவாக மாறிவிட்டது" என எழுதியுள்ளார்.
நெட்டிசன்கள் ரியாக்ஷன்
இந்த வீடியோவுக்கு 1.7 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. எனினும் பிராங்க் வீடியோக்களின் எல்லை குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது இந்த வீடியோ!
கள்ளத்தனமான செயலை காமெடியாக வீடியோ எடுப்பதும், பார்வையாளர்களுக்கு அத்தகைய சிந்தனையை பரப்புவதும் சரியானதல்ல என நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர்.
இது நகைச்சுவை அல்ல என்றும், அவமானகரமானது என்றும் கமண்ட் செய்துள்ளனர். வைரல் வீடியோக்களுக்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குறித்த உங்கள் கருத்துக்களை கமண்ட் செய்யுங்கள்!