தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
பாலஸ்தீன இயக்குநர் கைது விவகாரம்: மன்னிப்புக் கேட்ட ஆஸ்கர் விருதுக் குழு!
ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத விருதுக் குழு மீது கண்டனம் வலுத்த நிலையில் அவர்கள் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன இயக்குநர்கள் யுவால் ஆபிரஹாம், பசெல் ஆட்ரா, ஹம்தன் பலால், ராச்செல் ஸோர் இணைந்து உருவாக்கிய ஆவணப்படம் ’நோ அதா் லேண்ட்’. இது, சிறந்த ஆவணத் திரைப்படம் பிரிவில் இந்தாண்டுக்கான ஆஸ்கா் விருதை வென்றது.
இப்படத்தின் 4 இயக்குநர்களில் ஒருவரான ஹம்தன் பலால் மார்ச் 25 அன்று இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து, 3 பாலஸ்தீனர்கள் சூசியா என்ற கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அவரது கைதுக்கு உலகம் முழுவதும் பல திரைத்துறை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பான ‘தி அகாடமி’ குழுவினர் இதுதொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
ஆனால், கைது நடந்த இரு நாள்கள் கழித்து, ‘கலைஞர்களை அவர்களின் கருத்து மற்றும் படைப்புக்காக துன்புறுத்துவது கண்டனத்திற்குரியது’ என இயக்குநரின் பெயரைக் குறிப்பிடாமல் ‘தி அகாடமி’ சார்பில் அறிக்கை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தி அகாடமி அமைப்பைச் சேர்ந்த 600 உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் “ஒரு திரைத்துறை அமைப்பு மார்ச் முதல் வாரத்தில் ஒரு படத்திற்கு அங்கீகாரம் அளித்து விருது வழங்கிவிட்டு, சில வாரங்கள் கழித்து அந்த விருதை வாங்கியவர்களுக்கு ஆதரவாக நிற்காததை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாலஸ்தீன மேற்குக் கரைப் பகுதியில் குடியேறிய இஸ்ரேலியர்கள் ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் ஹம்தன் பலாலை தாக்கிய நிலையில், அவர் இஸ்ரேல் ராணுவத்தால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தி அகாடமி தலைமை வெளியிட்ட அறிக்கை முறையானதாக இல்லை” என உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
பின்னர், நேற்று ஆஸ்கர் விருதுக் குழுவான தி அகாடமி வெளியிட்ட அறிக்கையில், ”எங்களின் முந்தைய அறிக்கையால் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்த கலைஞர்கள் மற்றும் இயக்குநர் பலாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். பலால் மற்றும் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இயக்குநர் ஹம்தன் பலாலை அன்றைய தினமே இஸ்ரேல் அரசு விடுவித்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரது மனைவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.