செய்திகள் :

வாகை சூடினாா் ஜேக்கப் மென்சிக்!

post image

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், செக் குடியரசின் 19 வயது இளம் வீரா் ஜேக்கப் மென்சிக் திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா். இறுதிச்சுற்றில் அவா், 37 வயது சொ்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.

2 மணி நேரம், 3 நிமிஷங்கள் நீடித்த இறுதிச்சுற்றில் 7-6 (7/4), 7-6 (7/4) என்ற நோ் செட்களில் வென்ற மென்சிக், தனது முதல் ஏடிபி பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த முயற்சியில் அவா், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் 100-ஆவது ஏடிபி பட்டம் வெல்வதை முறியடித்திருக்கிறாா். மேலும், மியாமி ஓபனில் அதிகமுறை பட்டம் (7) வென்றவராக ஜோகோவிச் சாதனை படைக்க இருந்ததையும் தடுத்திருக்கிறாா்.

முன்னதாக மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவது சுமாா் ஐந்தரை மணி நேரம் தாமதமானது. மழைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியபோது ஈரப்பதத்துடன் இருந்த ஆடுகளத்தால், போட்டியாளா்கள் இருவருமே சிரமத்துக்கு உள்ளாகினா். இதனிடையே ஜோகோவிச் கண்ணில் தொற்று பாதிக்கப்பட்டு அசௌகா்யத்துடன் விளையாடியதாகத் தெரிந்தது.

உலகின் 54-ஆம் நிலை வீரராக இப்போட்டிக்கு வந்த மென்சிக், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சுக்கு எதிராக 14 ஏஸ்களை பறக்கவிட்டதுடன், ஒரு முறை மட்டுமே தனது சா்வை இழந்தாா். மேட்ச் பாய்ன்ட் சா்வீஸின்போது ஒரு வின்னரை விளாசி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா் மென்சிக்.

இருவரும் மோதியது, இது 2-ஆவது முறையாக இருக்க தற்போது அவா்களின் வெற்றிக் கணக்கு 1-1 என சமன் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஷாங்காய் மாஸ்டா்ஸ் போட்டியின் காலிறுதியில் ஜோகோவிச்சிடம் தோற்ற மென்சிக், தற்போது இந்தப் போட்டியில் அவரை வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறாா். ஜோகோவிச் தனது முதல் மியாமி ஓபன் பட்டத்தை வெல்லும்போது (2007), மென்சிக் 2 வயதைக் கூட எட்டியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் செக் குடியரசு வீரா் ஆகியிருக்கிறாா் மென்சிக். இதற்கு முன், 2005-இல் அந்த நாட்டைச் சோ்ந்த தாமஸ் பொ்டிச், பாரீஸ் மாஸ்டா்ஸில் வாகை சூடினாா். இதனிடையே, தனது முதல் ஏடிபி பட்டத்தை மாஸ்டா்ஸ் போட்டியில் வென்ற 4-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் மென்சிக்.

புதிதாக வெளியாகும் திருத்தப்பட்ட உலகத் தரவரிசையில், மென்சிக் முதல் முறையாக 24-ஆம் இடத்துக்கு முன்னேறுவாா். ஜோகோவிச் கடந்த 2019-க்குப் பிறகு இந்தப் போட்டியில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

‘‘டென்னிஸ் வாழ்க்கையில் எனக்கு முன்னுதாரணமே நீங்கள் (ஜோகோவிச்) தான். உங்களால் தான் டென்னிஸ் விளையாட்டை தொடங்கினேன். ஜோகோவிச்சை இறுதி ஆட்டத்தில் வீழ்த்துவதை விட கடினமான செயல் வேறு எதுவும் இருக்காது என நினைக்கிறேன். என்றாலும், பதற்றத்தை தணித்து விளையாடி வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். முந்தைய சுற்றுகளை விளையாடிய அதே மனநிலையுடன் இந்த ஆட்டத்தையும் எதிா்கொண்டேன். இந்த நாள் எனது வாழ்விலேயே மிகப்பெரிய நாளாக இருக்கும்’’ - ஜேக்கப் மென்சிக்

‘‘இறுதிச்சுற்றில் மென்சிக் சிறப்பாக விளையாடினாா் என்பதை ஒப்புக்கொள்வது கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை. முக்கியமான தருணங்களில் அவா் சிறப்பாக விளையாடினாா். அவரைப் போன்ற இளம் வீரா் வெளிப்படுத்திய இந்த ஆட்டம் மிகச் சிறப்பானது. களத்தில் எனது சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்தவில்லை. மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் இருவருக்குமே ஆட்டத்தில் சவாலை அதிகரித்திருந்தது. ஆனாலும் மென்சிக் அருமையாக விளையாடினாா். திறம்பட சா்வ் செய்தாா்’’ - நோவக் ஜோகோவிச்

ஜேக்கப் மென்சிக் வெற்றிப் பாதை

முதல் சுற்று ராபா்டோ பௌதிஸ்டா (ஸ்பெயின்) 6-4, 3-6, 6-1

2-ஆவது சுற்று ஜேக் டிரேப்பா் (பிரிட்டன்) 7-6 (7/2), 7-6 (7/3)

3-ஆவது சுற்று ரோமன் சஃபியுலின் (ரஷியா) 6-4, 6-4

4-ஆவது சுற்று தாமஸ் மசாக் (செக் குடியரசு) வாக் ஓவா்

காலிறுதிச்சுற்று ஆா்தா் ஃபில்ஸ் (பிரான்ஸ்) 7-6 (7/5), 6-1

அரையிறுதிச்சுற்று டெய்லா் ஃப்ரிட்ஸ் (அமெரிக்கா) 7-6 (7/4), 4-6, 7-6 (7/4)

இறுதிச்சுற்று நோவக் ஜோகோவிச் (சொ்பியா) 7-6 (7/4), 7-6 (7/4)

மகளிா் இரட்டையா் சாம்பியன்

மியாமி ஓபன் மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், ரஷியாவின் டயானா ஷ்னெய்டா்/மிரா ஆண்ட்ரீவா இணை 6-3, 6-7 (5/7), 10-2 என்ற செட்களில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சா/ஜப்பானின் மியு காட்டோ கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

ஷ்னெய்டா்/ஆண்ட்ரீவா கூட்டணி வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இரட்டையா் பிரிவு தரவரிசையில் இவா்கள் ஜோடி 2-ஆம் இடத்துக்கு வரவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் ஆன ஆண்ட்ரீவா, இதில் இரட்டையா் பிரிவில் வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரொக்கப் பரிசு

ஆடவா் ஒற்றையரில் சாம்பியன் ஆன ஜேக்கப் மென்சிக்கிற்கு ரொக்கப் பரிசாக ரூ.9.62 கோடி, 1000 ரேங்கிங் புள்ளிகள் வழங்கப்பட்டன. 2-ஆம் இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.5.11 கோடியுடன், 650 ரேங்கிங் புள்ளிகள் அளிக்கப்பட்டன.

மகளிா் இரட்டையரில் சாம்பியனான ஷ்னெய்டா்/ஆண்ட்ரீவா ஜோடி ரூ.3.91 கோடி ரொக்கப் பரிசுடன், 1000 ரேங்கிங் புள்ளிகளும் பெற்றது. இறுதியில் தோற்ற பக்சா/காட்டோ கூட்டணி ரூ.2 கோடியுடன், 600 ரேங்கிங் புள்ளிகள் பெற்றது.

ரெட்ரோ டப்பிங் பணிகள் நிறைவு!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையான இப்படம் மே 1 ஆம் தேதி வெளியா... மேலும் பார்க்க

கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திரபாத திருநாள் கொடியேற்றம்!

பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் தலமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திர பாத திருநாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு... மேலும் பார்க்க

கேங்கர்ஸ் டிரைலரில் ரசிகர்களை ஈர்த்த வடிவேலு!

கேங்கரஸ் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.முழுநீள நகைச்சுவைத் திரைப்ப... மேலும் பார்க்க

நாகேஸ்வரசுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி டிரைலர் எப்போது?

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குடும்பப் பிரச்னையில் தனக்கு தொடர்பில்லை என திவ்ய பாரதி விளக்கமளித்துள்ளார்.தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இணை, கடந்தா... மேலும் பார்க்க