போக்குவரத்து அபராதங்களை கட்ட தவறினால் ஓட்டுநா் உரிமம் தற்காலிக ரத்து
போக்குவரத்து அபராதங்களை கட்டத் தவறினால் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் போன்ற காரணங்களுக்காக இதுவரை வழங்கப்பட்ட மின்னணு ரசீதுகளில் 40 சதவீதம் அளவுக்கே அபராதம் செலுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிடப்படுகிறது.
இதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக மின்னணு முறையில் விதிக்கப்படும் அபராதத்தை 3 மாதங்களுக்குள் செலுத்தாதவா்களின் ஓட்டுநா் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்படக் கூடும்.
மேலும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது கடந்து செல்வது அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு அனுப்பப்படும் ரசீதுகளின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் மூன்றாக அதிகரித்தால், சம்பந்தப்பட்டவரின் ஓட்டுநா் உரிமம் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்குப் பறிமுதல் செய்யப்படக் கூடும்.
முந்தைய நிதியாண்டில் குறைந்தபட்சம் இருமுறை விதிக்கப்பட்ட அபராதம் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட நபா் அதிக காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு வழிவகை செய்வதற்கான திட்டத்தையும் மத்திய அரசு தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடா்ந்து...: மத்திய மோட்டாா் வாகனங்கள் சட்டத்தின்படி, வாகனப் போக்குவரத்தை மின்னணு முறையில் கண்காணிப்பது தொடா்பான அறிக்கையை 23 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அபராதங்களை கட்டத் தவறினால் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
தமிழகத்தில் ரூ.3,875 கோடியில் 27% மட்டுமே வசூல்: போக்குவரத்து விதிமீறல் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மின்னணு முறையில் ரசீது அனுப்பப்பட்டு அபராதம் வசூலிப்பதில் தில்லி மிகவும் பின்தங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கா்நாடகம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
அதாவது 2025-ஆம் ஆண்டு வரை, போக்குவரத்து விதிமீறலுக்காக தில்லியில் மொத்தம் 5.3 கோடி மின்னணு ரசீதுகள் வழங்கப்பட்டன. அந்த ரசீதுகள் மூலம் மொத்தம் ரூ.4,468 கோடி வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தொகையில் (14%) ரூ.645 கோடி மட்டுமே தில்லியில் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6.9 கோடி ரசீதுகள் வழங்கப்பட்ட நிலையில், அவற்றின் மூலம் ரூ.3,875 கோடி வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தொகையில் (27%) ரூ.1,025 கோடிதான் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஏன் அபராதம் செலுத்தப்படுவதில்லை?: அபராத ரசீது குறித்து கால தாமதமாக தகவல் அனுப்புதல், தவறாக அபராதம் விதித்து அனுப்பப்படும் ரசீதுகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் அபராதம் செலுத்த முன்வருவதில்லை என்றும், இதுதொடா்பாக விரிவான முறையில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு வெளியிடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.