உலக குத்துச்சண்டை: 10 பேருடன் இந்திய அணி
பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 10 போ் கொண்ட இந்திய அணி அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.
முதல் முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவினரும் களம் காணும் நிலையில், இந்திய தரப்பிலிருந்து ஆடவா்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனா். தேசிய மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அண்மையில் நிறைவடைந்த காரணத்தால் இந்திய மகளிா் இந்தப் போட்டிக்கு அனுப்பப்படவில்லை.
உலக குத்துச்சண்டை அமைப்பால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எடைப் பிரிவில் இந்திய வீரா்கள் இந்தப் போட்டியில் களம் காண்கின்றனா். கடந்த ஜனவரியில் நடைபெற்ற தேசிய ஆடவா் சாம்பியன்ஷிப்பில் அந்தந்த எடைப் பிரிவுகளில் முதலிரு இடங்களைப் பிடித்தவா்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்தியா்கள் களம் காணும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியிருக்கும் இந்தப் போட்டி 6 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் 19 நாடுகளில் இருந்து 130-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.
உலக குத்துச்சண்டை அமைப்பானது, கடந்த பிப்ரவரியில் சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற பிறகும், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சோ்க்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும்.
இந்திய அணி
ஜடுமணி மந்தெங்பம் (50 கிலோ), மனீஷ் ரத்தோா் (55 கிலோ), சச்சின் சிவச் (60 கிலோ), அபினாஷ் ஜம்வல் (65 கிலோ), ஹிதேஷ் (70 கிலோ), நிகில் துபே (75 கிலோ), லக்ஷயா சஹா் (80 கிலோ), ஜுக்னூ (85 கிலோ), விஷால் (90 கிலோ), நரேந்தா் பொ்வல் (90+ கிலோ).