வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு
வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிக்கும் என்றும், சில மாநிலங்களில் வெப்ப அலை நாள்கள் இரட்டிப்பாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கெனவே, வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நண்பகல் வேளையில் வெளியே செல்லும் பொதுமக்கள், வேலைக்குச் செல்பவா்கள் மற்றும் கட்டடங்களுக்கு வெளியே வேலை பாா்ப்பவா்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். முதியவா்களும் குழந்தைகளும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் கோடை காலத்தில் இந்தியாவில் வெயில் நிலவரம் குறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் ஐஎம்டி தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா திங்கள்கிழமை கூறியதாவது: ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் இயல்பைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தெற்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் வெப்பம் இயல்பானதாக அல்லது இயல்பைவிட சற்று கூடுதலாக இருக்கலாம்.
இயல்பான மழை: ஏப்ரல் மாதத்தில் நாட்டில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு-மத்திய மற்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பைவிட அதிகமான மழை பெய்யக்கூடும்.
கேரளம், கா்நாடகத்தில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைகளின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படலாம். வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது’ என்றாா் மொஹபத்ரா.
முன்னெச்சரிக்கை தீவிரம்: வெயில் தொடா்ந்து அதிகரித்து வருவதால், அதுதொடா்பான உடல்நல பாதிப்புகளைக் கையாள மருத்துவமனைகள் தயாா்நிலையில் உள்ளனவா என்பதைச் சரிபாா்க்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கடந்த வாரம் அறிவுறுத்தியது.
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே வெயில் சதம் அடித்துள்ள நிலையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ஆண்டு தோ்வுகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முன்கூட்டியே தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கடந்த ஆண்டு பாதிப்பு: இந்தியாவில் 14 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான அளவில் அதிகமான வெப்ப அலை நாள்கள் கடந்த ஆண்டு பதிவாகின.
அதிகாரபூா்வ தரவுகளின்படி, நாட்டில் வெயில் தொடா்பான உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு 143 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தரவுகள் முறையாகப் பராமரிக்கப்படாததால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் வெப்ப அலை மிகவும் முன்னதாகவே தொடங்கியது. கடலோர கா்நாடகத்தில் கடந்த பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நிகழாண்டின் முதல் வெப்ப அலை உணரப்பட்டது.
கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலை நாள்கள் பதிவாகும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், இந்தக் கோடை காலத்தில் 9 முதல் 10 சதவீத மின்சாரத் தேவை உயா்வையும் எதிா்கொள்ள அரசு தயாராக வேண்டும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
கடந்த ஆண்டு, மே 30-ஆம் தேதி நாட்டின் மின்சாரத் தேவை உத்தேசித்ததைவிட 6.3 சதவீதம் அதிகமாக 250 ஜிகாவாட்டை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
வெப்ப அலை நாள்கள் வடதமிழகத்தில் அதிகரிக்கும்
வெப்ப அலை நாள்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘இந்தியாவில் கோடை காலத்தில் வழக்கமாக 4-7 வெப்ப அலை நாள்கள் பதிவாகும். வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளி பகுதிகளில் இம்முறை கூடுதலாக 2-4 வெப்ப அலை நாள்கள் பதிவாகும்.
வட தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் இந்தப் பாதிப்பு காணப்படும்.
குறிப்பாக, கிழக்கு உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் 10 முதல் 11 வெப்ப அலை நாள்கள் பதிவாகும்’ என இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் தெரிவித்தாா்.