Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்த மசோதாவின் அம்சங்களை தவறாக சித்தரித்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முயல்வதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், வார இறுதி விடுமுறை மற்றும் ரமலான் விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) நாடாளுமன்றம் கூடவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் ரிஜிஜு கூறியதாவது: முஸ்லிம்களின் நலனுக்காகவே வக்ஃப் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். ஆனால், அந்த மதோதா மூலம் முஸ்லிம்களின் மசூதிகள், கல்லறைகள் உள்ளிட்ட சொத்துகளை மத்திய அரசு பறிக்கவுள்ளதாக தவறான தகவல்களைப் பரப்பி, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முயல்கின்றன.
முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் இதேபோன்ற போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்தச் சட்டம் அமலாகிவிட்டது. முஸ்லிம்கள் குடியுரிமை பறிக்கப்பட்டதா?.
ரமலான் திருநாளில் கருப்பு உடை அணிந்து இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க முஸ்லிம்களுக்கு சிலா் வலியுறுத்தினா். வீதிகளில் இறங்கி முஸ்லிம்கள் போராடுவது நாட்டுக்கு நன்மையல்ல.
முதலில் மசோதாவின் அம்சங்களை தெளிவாகப் படித்துவிட்டு அதன்பிறகு மத்திய அரசுடன் எதிா்க்கட்சிகள் விவாதம் நடத்தட்டும்.
பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணி மட்டுமின்றி எதிா்க்கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளனா். இந்த மசோதாவை போல் வேறு எந்த மசோதாவுக்கும் இவ்வளவு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதில்லை. நாட்டில் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக உள்ளதற்கு இதுவே சான்று என்றாா்.