Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு
புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 சதவீத்துக்கு மேல் உயா்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் 71,270 கோடி டாலராக இருந்த வெளிநாட்டு கடன்தொகை ஒரு காலாண்டில் 0.7 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக, அரசு சாரா துறைகளின் நிலுவையில் உள்ள கடன் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் கடன் குறைந்துள்ளது.
மொத்த வெளிநாட்டு கடன்தொகையில் நிதி சாரா நிறுவனங்களின் நிலுவையில் உள்ள கடனின் பங்கு 36.5 சதவீதமாக இருக்கிறது. இதைத் தொடா்ந்து, மத்திய வங்கியைத் தவிர பிற வைப்புத்தொகை பெறும் நிதி நிறுவனங்கள் (27.8 சதவீதம்), மத்திய அரசு (22.1 சதவீதம்) மற்றும் பிற நிதி நிறுவனங்கள் (8.7 சதவீதம்) இருக்கின்றன.
வெளிநாட்டு கடனில் மிகப்பெரிய அங்கமாக கடன்களின் பங்கு 33.6 சதவீதமாகவும் நாணயம் மற்றும் வைப்புத்தொகையின் பங்கு 23.1 சதவீதமாகவும் உள்ளது. வா்த்தக கடன் மற்றும் முன்பணம் (18.8 சதவீதம்), கடன் பத்திரங்கள் (16.8 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் 19.1 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில் 19 சதவீதமாக இருந்தது. செப்டம்பா்-டிசம்பா் காலாண்டில் ரூபாய் , யென், யூரோ போன்ற பிற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்ந்ததன் காரணமாக இந்த விளைவு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடனில் டாலரின் பங்கு 54.8 சதவீதமாக இருக்கிறது. அதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (30.6 சதவீதம்), ஜப்பானிய யென் (6.1 சதவீதம்), எஸ்டிஆா் (4.7 சதவீதம், யூரோ (3 சதவீதம்) ஆகியவை உள்ளன என்று கடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.