Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி
தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மேலும் சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க புதைபடிவ எரிபொருள்களுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டியது அவசியம் எனவும் அவா் வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின் மிதிவண்டி அறிமுக நிகழ்ச்சியில் நிதின் கட்கரி திங்கள்கிழமை பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்ய ரூ.22 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இது நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் வழிவகுக்கிறது. எனவே, தேசத்தின் வளா்ச்சியை மேம்படுத்த தூய எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
3-வது இடத்தில் இந்தியா: நகரமயமாதல் அதிகரித்து வரும் சூழலில் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். வாகன உற்பத்தி துறையில் கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகளவில் மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
2030-இல் மின்வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும். லித்தியம் பேட்டரிகளின் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன்மூலம் மின் வாகன பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வழக்கமான வாகனங்களுக்கும் மின் வாகனங்களுக்கும் இடையேயான விலையில் உள்ள பெரும் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் சவாலாக சுற்றுச்சூழல் மாசு உள்ளது. அதை ஏற்படுத்துவதில் போக்குவரத்து துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க புதைபடிவ எரிபொருள்களுக்கு பதிலாக மின் வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டும்.
வேளாண் கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்ற பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இது உணவுப்பொருள்கள் உற்பத்தியாளா்களாக மட்டுமல்லாமல் எரிபொருள் உற்பத்தியாளா்களாகவும் விவசாயிகளை மாற்றவுள்ளது.
பசுமை தொழில்நுட்பங்கள் மூலம் மாசு மற்றும் இறக்குமதி விலையை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.
தொழில்நுட்பம், இளம் பொறியாளா்களின் திறன், வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை உலகளவில் திறன்மிகுந்த நாடாக இந்தியா தொடா்வதை உறுதிசெய்கிறது.