தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் நண்பர் ராஜாராமுடன் முத்தையம்பட்டி மதுக்கடையில் மதுவாங்கி அருகே உள்ள கடையில் வைத்து குதித்திருக்கிறார், முத்துக்குமார். அப்போது அங்கிருந்த தேனியைச் சேர்ந்த பொன்வண்ணன், பிரகாஸ், பாஸ்கரன், சிவனேசன் ஆகியோர் மதுபோதையில் இருந்துள்ளனர்.

ஏற்கெனவே முத்துக்குமாருக்கு, பொன்வண்ணன் உடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் பொன்வண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கவும், பொன்வண்ணன் தரப்பு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து முத்துக்குமார், ராஜாராமும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்த பொன்வண்ணன் தரப்பினர், முத்துக்குமார் மற்றும் ராஜாராமை மீண்டும் சரமாரியாக தாக்கி அருகே கிடந்த கல்லால் தலையில் பலமாக தாக்கியதில் முத்துக்குமார் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
பொன்வண்ணன் தரப்பு அங்கிருந்து தப்பினர். அவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில் தேனி வருசநாடு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தென்மண்டல ஐ.ஐி., பிரேம் ஆனந்த் சின்ஹா, திண்டுக்கல் டி.ஐ.ஜி, தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 4 எஸ்.பி., தலைமையிலான போலீஸார், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்டப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கம்பம் மெட்டு அடிவாரப்பகுதியில் வைத்து பிடிக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொன்வண்ணன் காயமடைந்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``வருசநாடு மலை முழுவதும் போலீஸார் பல டீம்களாக பிரிந்து தேடினோம். ஆனால் பொன்வண்ணன் தரப்பு வருசமலையில் இருந்து கேரளா தப்ப முயன்றது தெரியவந்தது. இதனால் தப்ப முடியாத வகையில் எல்லைப்பகுதிகளில் போலீஸாரை நிறுத்தியிருந்தோம். இதனால் அவர்கள் கம்பம் மெட்டு வழியாக கேரளா தப்ப முயன்றனர். அவரைப் பின்தொடர்ந்து பிடிக்க முயன்றபோது, எதிர்தாக்குதல் நடந்த வந்த பொன்வண்ணன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அதில் பொன்வண்ணனுக்கு வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

அவரை உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தோம். பிறகு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். இவ்வழக்கில் தொடர்புடைய பிரகாஸ், பாஸ்கரன், சிவனேசன் ஆகியோரையும் கைது செய்துள்ளோம். கஞ்சா வியாபாரம் செய்துவந்த பொன்வண்ணன் உள்ளிட்ட 4 பேரும் ரௌடி பட்டியலில் உள்ளவர்கள். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றனர்.