தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
Ruturaj Gaikwad: 'ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கவே கூடாது!' - ஏன் தெரியுமா?
'ருத்துராஜ் - நம்பர் 3'
பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மிக மோசமாக தோற்றிருக்கிறது. அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் இறங்காமல் நம்பர் 3 இல் இறங்கி வருவதும் தோல்விக்கு மிக முக்கிய காரணமே. ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கவே கூடாது. ஏன் தெரியுமா?

'ருத்துராஜ் ப்ளாஷ்பேக்'
ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்கு அறிமுகமான கதையையும் பார்க்க வேண்டும். 2020 சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கிறது. அணியில் யாருமே சிறப்பாக செயல்படாததால் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு தோனி வாய்ப்புக் கொடுத்தார். அந்தவகையில் ருத்துராஜூக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கொஞ்சம் கோக்குமாக்கான வாய்ப்பு. ஓப்பனிங் பேட்டரான அவரை தோனி மிடில் ஆர்டரில் இறக்கினார். ஒன்றிரண்டு போட்டிகளில் ருத்துராஜூக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரால் சரியாக ஆட முடியவில்லை, திணறினார். உடனே தோனி ருத்துராஜை ட்ராப் செய்தார்.
ருத்துராஜை குறிப்பிட்டே, 'இளம் வீரர்கள் யாருக்கும் ஸ்பார்க்கே இல்லை.' என விமர்சித்தார்.

அதன்பிறகு, சில போட்டிகள் கழித்து மீண்டும் ருத்துராஜூக்கு அணிக்குள் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை ருத்துராஜ் ஓப்பனிங்கில் இறக்கப்பட்டார். தனக்கான இடம் கிடைத்தவுடன் அதை அப்படியே பிடித்துக் கொண்டார். 2021 சீசனில் டூப்ளெஸ்சிஸூடன் ஓப்பனிங் இறங்கி 635 ரன்களை எடுத்திருந்தார். 2023 சீசனில் கான்வேயுடன் ஓப்பனிங் இறங்கி 590 ரன்களை எடுத்திருந்தார். இந்த இரண்டு சீசன்களிலுமே சென்னை அணி சாம்பியன்.

'ருத்துராஜ் - ஓப்பனிங - பலம்'
சென்னை அணியில் ருத்துராஜ் பிடித்திருந்த ஓப்பனிங் ஸ்பாட் என்பது அவர் போராடி வென்று தன்னை நிரூபித்துக் காட்டிய இடம். இப்போது அந்த இடத்தை விட்டு விட்டுதான் நம்பர் 3 இல் இறங்குகிறார். கடந்த இரண்டு போட்டிகளிலுமே நம்பர் 3 இல் தான் வந்திருக்கிறார். மும்பைக்கு எதிராக அரைசதம் அடித்தார். பெங்களூருவுக்கு எதிராக டக் அவுட் ஆகியிருக்கிறார்.
ருத்துராஜை பொறுத்தவரைக்கும் அவர் ஓப்பனிங் இறங்குவதுதான் அணிக்கு நல்லது. ஏனெனில், 2021 சீசனில் டூப்ளெஸ்சிஸூம் ருத்துராஜூம் மட்டும் 1268 ரன்களை சேர்த்திருந்தனர். 2023 சீசனில் கான்வேயும் ருத்துராஜூம் மட்டும் 1262 ரன்களை சேர்த்திருந்தனர். இந்த இரண்டு சீசன்களிலும் சென்னை அணி சாம்பியன். இதிலிருந்து ஓப்பனிங் கூட்டணி சிறப்பாக செயல்படுவதும், அந்த ஓப்பனிங் கூட்டணியில் ருத்துராஜ் இருப்பதும் மிக முக்கியம் என தெரிந்துகொள்ள முடியும்.
'சோபிக்காத திரிபாதி!'
இப்போது ரச்சின் ரவீந்திராவும் ராகுல் திரிபாதியும் ஓப்பனிங் இறங்கி வருகிறார்கள். முதல் இரண்டு போட்டிகளிலும் இந்த ஓப்பனிங் கூட்டணி எடுத்த ரன்கள் முறையே 11, 8 மட்டுமே. ராகுல் திரிபாதியால் ஓப்பனிங்கில் சரியாக ஆட முடியவில்லை.
சரி ராகுல் திரிபாதிதான் முதல் ஒரு சில ஓவர்களிலேயே வந்து விடுகிறாரே? எனில், அவர் ஓப்பனிங் இறங்கினால் என்ன நம்பர் 3 இல் இறங்கினால் என்ன? என தோன்றும். நியாயமான கேள்விதான். ஆனால், விக்கெட்டே விழ வில்லை எனும் நிலையில் ருத்துராஜ் ஆடுவதற்கும், 8-1 என்ற நிலையில் ருத்துராஜ் ஆடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
விக்கெட் விழாத நிலையில் ருத்துராஜ் ஓப்பனராக இருந்து ரன் அடிக்கும்போது அது மற்ற வீரர்களுக்கும் தெம்பை கொடுக்கும். அதேநேரத்தில், ருத்துராஜ் ஓப்பனிங் இறங்காமல் முதல் ஒரு சில பந்துகளிலேயே விக்கெட்டை விடுவது ஒட்டுமொத்த அணிக்கும் அயர்ச்சியையே கொடுக்கும்.

'வாய்ப்பை வீணாக்கும் திரிபாதி!'
அதேமாதிரி, ராகுல் திரிபாதி ஓப்பனிங்கில் இறக்கப்படுகிறார் இல்லையா. அதற்கும் எந்த தேவையும் இல்லை. கடந்த சீசனில் ருத்துராஜ் சில போட்டிகளில் நம்பர் 3 இல் இறங்கினார். காரணம், ரஹானே. அவர் ஃபார்முக்கு வர முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். ரஹானேக்காக தன்னுடைய ஓப்பனிங் ஸ்லாட்டை ருத்துராஜ் விட்டுக் கொடுத்தார். அது செட் ஆகவில்லை என்றவுடன் மீண்டும் ஓப்பனிங்கே வந்தார்.
கடந்த சீசனில் ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்க ஒரு காரணம் இருந்தது. ஆனால், இந்த சீசனில் அவர் நம்பர் 3 இல் இறங்க எந்த காரணமும் இல்லை. ராகுல் திரிபாதியால் நம்பர் 3,4,5 போன்ற மிடில் ஆர்டர்களில் இறங்க முடியும். ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடக்கூடியவர். மிடில் ஆர்டரில் இறங்குவதுதான் அவரின் பலம். அப்படியிருக்க அவரை ஓப்பனிங்கில் இறக்க வேண்டிய தேவை என்ன என்பதுதான் புரியாத புதிர்.

சென்னை அணி வலுவாக இருக்க அதன் ஓப்பனிங் கூட்டணி ரொம்பவே முக்கியம். அந்த ஓப்பனிங்கில் ருத்துராஜ் இருக்க வேண்டும். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலாவது ருத்துராஜ் மனம் மாறுவாரா என்பதைப் பார்ப்போம்.