வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
GT Vs MI : 'அடங்கிப்போன மும்பை; உள்ளூர் சூட்சமத்தோடு வென்ற குஜராத்' - என்ன நடந்தது?
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அஹமதாபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத்தில் சமயோஜிதமான பௌலிங்கை சமாளிக்க முடியாமல் மும்பை அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. ஹர்திக் பாண்ட்யாதான் டாஸை வென்றிருந்தார். காற்றின் ஈரப்பதத்தை காரணம் காட்டி முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 196 ரன்களை எடுத்திருந்தது. இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்கள் அந்த அணிக்கு கிடைத்தது. ஓப்பனிங் இறங்கிய கில்லும் சாய் சுதர்சனும் இணைந்து 78 ரன்களை அடித்தனர்.

பவர்ப்ளேயில் மட்டும் இந்த கூட்டணி 66 ரன்களை சேர்த்திருந்தது. பவர்ப்ளே ஸ்பெசலிஸ்டகளான தீபக் சஹார், போல்ட் என இருவரின் பந்துவீச்சையுமே கில்லும் சாய் சுதர்சனும் நேர்த்தியாக எதிர்கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து வீசிய முதல் ஸ்பெல்லில் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் 4 பவுண்டரிக்களுடன் 31 ரன்களை சேர்த்திருந்தனர். போல்ட் இரண்டு ஓவருடன் முதல் ஸ்பெல்லை முடித்துக் கொண்டார். சஹார் மட்டும் பவர்ப்ளேக்குள்ளாகவே 3 வது ஓவரையும் வீசினார். அந்த 3 வது ஓவரில் மட்டும் 20 ரன்களை கொடுத்திருந்தார். பவர்ப்ளேயில் நன்றாக ஆடிய இந்தக் கூட்டணி, பவர்ப்ளே முடிந்த பிறகு பவுண்டரி அடிக்க கொஞ்சம் திணறினர். 2 ஓவர்களாக பவுண்டரி வராமல் இருக்க, பவுண்டரிக்கு கடுமையாக முயன்ற கில் ஹர்திக்கின் ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயன்று 38 ரன்களில் அவுட் ஆனார்.
நம்பர் 3 இல் பட்லர் உள்ளே வந்தார். பட்லரும் சாய் சுதர்சனும் இணைந்து 51 ரன்களை சேர்த்திருந்தனர். இதில் பட்லர் மட்டும் 34 ரன்களை அடித்திருந்தார். ஒரு 5 ஓவர்களுக்கு சாய் சுதர்சனை செகண்ட் ஃபிடில் ஆட வைத்தார். சாண்ட்னர், ஹர்திக், முஜீப் என அனைவரின் ஓவரிலும் அதிரடியாக ஆடிவிட்டு முஜீப்பின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். நீண்ட நேரமாக நின்று ஆடிய சாய் சுதர்சன் 15 வது ஓவரில் அரைசதத்தை கடந்தார். சத்யநாராயண ராஜூவின் பந்தில் சிக்சர் அடித்தவர், 62 ரன்களில் போல்ட்டின் பந்தில் Lbw ஆகி வெளியேறினார். டெத்தில் ஷாரூக்கான், ரூதர்போர்டு, ரஷீத் கான் ஆகியோர் தலா ஒன்றிரண்டு சிக்சர்களை அடித்து அணியின் ஸ்கோரை 190 க்கு மேல் எடுத்து சென்றனர்.

மும்பை அணிக்கு டார்கெட் 197. அஹமதாபாத் மைதானத்தில் இரண்டு விதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று களிமண் பிட்ச். இன்னொன்று செம்மண் பிட்ச். நேற்றைய போட்டி களிமண் பிட்ச்சில் நடந்திருந்தது. இந்த பிட்ச் கொஞ்சம் மெதுவாகவும் பேட்டர்களுக்கு ஆடுவதற்கு சிரமமாகவும் இருக்கும். ஹோம் டீம் என்பதால் குஜராத் இந்த பிட்ச்சை நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தனர். அதனால் இந்த பிட்ச்சுக்கு ஏற்ற வகையில் வேகமே எடுக்காமல் ஸ்லோயர் ஒன்களாக வீசி தள்ளினர். பிட்ச்சின் தன்மையே மந்தமானது. அப்படியிருக்க குஜராத் பௌலர்கள் அதில் ஸ்லோயர் ஒன்களை வீசியதை மும்பை பேட்டர்களால் எதிர்கொள்ளவே முடியவில்லை. கடினமான பிட்ச் என்பதால் இந்த டார்கெட்டை எட்ட வேண்டுமெனில் பவர்ப்ளேயில் பெரிய ஸ்கோரை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், மும்பை அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரோஹித் சர்மா, ரிக்கல்ட்டன் இருவரையும் சிராஜ் போல்ட் ஆக்கியிருந்தார். பவர்ப்ளே முடிந்த பிறகு ரன்ரேட் ப்ரஷர் மும்பையின் முதுகில் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடிய திலக் வர்மாவால் அதன்பிறகு அடித்து ஆட முடியவில்லை, கடுமையாக திணறினார். சூர்யகுமார் இன்னொரு முனையில் கிடைத்த வாய்ப்பில் ஏதுவான பந்துகளில் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 36 பந்துகளில் 39 ரன்களை எடுத்து பிரசித் கிருஷ்ணாவின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இம்பாக்ட் ப்ளேயராக வந்த ராபின் மின்ஸ் ஒன்றுமே செய்யவில்லை.

அவர் பங்குக்கு ஒரு ஓவரை விரயமாக்கி சாய் கிஷோரின் பந்தில் அவுட் ஆகினார். ஹர்திக் பாண்ட்யாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்லோயர் ஒன்களில் நினைத்தபடி ஷாட் ஆட முடியாமல் தடுமாறினார். கடைசி 5 ஓவர்களில் மும்பைக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. ரன்ரேட் அழுத்தம் ஏறி பிரசித் கிருஷ்ணாவின் பந்தில் சிக்சருக்கு முயன்று 48 ரன்களில் சூர்யா அவுட் ஆனார். தொடர்ந்து ஹர்திக்கும் ரபாடாவின் ஓவரில் 17 பந்துகளில் 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் அரைகுறையாக ஷாட் ஆடி வெளியேறினார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 51 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
சீசனின் முதல் இரண்டு போட்டிகளையும் மும்பை தோற்றிருக்கிறது. 'மும்பை இப்படி சீசனை தொடங்கினால்தான் சாம்பியன் ஆவார்கள்.' என சஞ்சய் மஞ்சரேக்கர் வர்ணனையில் ஜாலியாக உருட்டிக் கொண்டிருந்தார். உருட்டு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.